கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் எஸ்பிஐ பணம் டெபாசிட் செய்யும் மெஷினைக் குறிவைத்து கொள்ளைகள் நடைபெற்றது தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதுதொடர்பாக ஹரியானாவைச் சேர்ந்த அமீர் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் வீரேந்தர் என்பவரும் கைது செய்யப்பட்டிருந்தார்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களைப் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்திருந்த நிலையில், தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், ஏடிஎம் கொள்ளையின்போது அமீருடன் பைக் ஓட்டிச் சென்றதாக ஹரியானாவைச் சேர்ந்த வீரேந்தர் தெரிவித்துள்ளார். வீரேந்தரை நான்கு நாட்கள் காவலில் எடுத்து நடத்தப்படும் விசாரணையில் புதிய புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. பைக் ஓட்டினால் பணம் தருவதாக கூறி தமிழ்நாடு அழைத்து வந்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். அதேபோல் எஸ்பிஐ ஏடிஎம்களில் கொள்ளை சம்பவத்தில் பைக் ஓட்ட வீரேந்தருக்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் தந்ததும் தெரியவந்துள்ளது.