சென்னை ஐ.ஐ.டி. நிறுவனத்தில் கேரளாவைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட மாணவர் அமைப்புகளும், தமமுக, எஸ்டிபிஐ உள்ளிட்ட சிறுபான்மை அமைப்புகளும் நவம்பர் 14-ந் தேதி சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவி பாத்திமாவின் தற்கொலைக்குக் காரணமானவர்கள் என்று சொல்லப்படும் பேராசிரியர்கள் மீது உடனடியாக விசாரணை மேற்கொண்டு, நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், இதற்கு முன்னர் நடைபெற்ற தற்கொலைகளையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்தால் மட்டுமே பல உண்மைகள் வெளிவரும் என்கின்றனர் போராட்டக்காரர்கள்.
தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், “சென்னை ஐ.ஐ.டி. மாணவி ஃபாத்திமா லத்தீப்பின் மரணம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்வி நிலையங்களைக் காவிமயமாக்குவதைத் தவிர்த்து, நம் தேசியக் கொடியில் உள்ள வண்ணங்களைப் போல, அனைவரையும் சமமான உரிமையுடன் நடத்தும் போக்கு மேம்பட ஆவன செய்யவேண்டும்”என இதனைக் கண்டித்திருந்தார்.
இந்நிலையில், தி.மு.க. மாணவரணியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று காலை சென்னை ஐ.ஐ.டி.-யை முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். துணைச் செயலாளர் கவி.கணேசன் ஒருங்கிணைப்பில், இணைச் செயலாளர் ஜெரால்டு உள்ளிட்ட ஏராளமானோர் இந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.