எளம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித பட்டதாரி ஆசிரியை பைரவி தம்முடைய சொந்தப் பணத்தில் ரூ.1 லட்சம் மதிப்பில் மாணவர்களுக்கு ஸ்மார்ட் ஃபோன் மற்றும் 4ஜி சிம்கார்டு உடன் ரீசார்ஜ் ஆகியவற்றை வழங்கி வீட்டிலிருந்து பள்ளி திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறார்.
பெரம்பலூர் மாவட்டம், எளம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் (05.09.2020) ஆசிரியர் தினவிழா சமூக இடைவெளியுடன் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அவ்விழாவில், பள்ளியின் தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர்கள், ஆசிரிய- ஆசிரியைகள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பள்ளியின் உதவி தலைமை ஆசிரியையும் மூத்த பட்டதாரி ஆசிரியையுமாகிய க. பைரவி (கணிதம்) என்பவர் 10ஆம் வகுப்பு ஆங்கில வழியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் தம்முடைய சொந்தப் பணத்தில் சுமார் 1 லட்சம் செலவில் 4ஜி ஸ்மார்ட் ஃபோன்கள் மற்றும் 4ஜி சிம்கார்டு உடன் ரீசார்ஜ் ஆகியவற்றை வழங்கி 'வீட்டில் இருந்தே பள்ளி' என்ற அரசின் திட்டத்தைச் சரியாக பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுரை மற்றும் ஆலோசனைகள் வழங்கினார்.
முன்னதாக இந்த உதவியை அவர் செய்வதற்கான காரணமாக பின்வரும் தகவல்களை கூறினார்.
பெரம்பலூர் மாவட்டம், எளம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள், அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை உயர்த்திடவேண்டி, தமிழக அரசின் உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் உத்தரவிற்கு இணங்கவும், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் அவர்களது மேலான ஆலோசனைகளின்படியும் மாணவர் சேர்க்கை பேரணியை நடத்தினர். அப்போது எளம்பலூர் மற்றும் அருகாமையில் உள்ள எம்.ஜி.ஆர் நகர், சமத்துவபுரம் மற்றும் ராஜிவ் காந்தி நகர் ஆகிய பகுதிகளில் பள்ளியின் சிறப்பம்சங்களையும் அரசின் பல்வேறு சலுகைகள் மற்றும் உதவி திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்து வீடுதோறும் பரப்புரை நடத்தி வந்தனர்.
அப்போது தம்மிடம் பயிலும் மாணவர்கள் வீட்டிலிருந்தே பள்ளி திட்டத்தில் தொடர்ச்சியாக பங்கேற்காத காரணம் கேட்டறிந்த போது: "சிலரிடம் ஸ்மார்ட் ஃபோன் இல்லை. சில பெற்றோர் வேலை பார்க்கும் இடத்திற்கு ஃபோன் எடுத்துச் சென்று விடுகின்றனர். ரீ-சார்ஜ் செய்ய வசதியின்மை, வீட்டில் இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருப்பதால் ஃபோன் ஒதுக்கீடு நேரம் கிடைக்கவில்லை."
போன்ற பொதுவான பல காரணங்களாலும் எழ்மைநிலையில் இருப்பதாலும் பல மாணவர்கள் தொடர்ச்சியாக பாடத்தில் கவனம் செய்ய இயலவில்லை என்பது தெரியவந்துள்ளது. எனவே, 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதும் தன்னுடைய மாணவர்களுக்கு ஃபோன் மூலமான வகுப்பு மிகவும் அவசியம் என்று கருதிய கணித ஆசிரியை திருமதி. க.பைரவி, தம்முடைய சொந்தப் பணம் 1 -லட்சம் செலவில் புதிதாக 16 ஸ்மார்ட் ஃபோன்கள், 4ஜி சிம் கார்டுகள் புதிதாக ஆக்டிவேட் செய்து ரீச்சார்ஜ் உடன் பத்தாம் வகுப்பு ஆங்கில வழி பிரிவின் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கியுள்ளார்.
அச்சமயம் மாணவர்களுக்கு அந்த தொலைபேசி எண்ணை கல்வி செயல்பாடுகளுக்கு மற்றும் பிரத்யேகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், எவ்வித இடற்பாடும் இல்லாமல் தொடர்ந்து கல்வி செயல்பாடுகளில் எவரும் விடுபடாமல் பங்கேற்க வேண்டும் எனவும், லாக்டவுன் முடியும் வரையில் தாமே ரீச்சார்ஜ் செலவை ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்து உள்ளார்.
மேலும் தன்னுடைய வகுப்பில் (பத்தாம் வகுப்பு ஆங்கில வழி) புதிதாக சேரும் மாணவர்களுக்கும் இதேபோல வழங்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார். மேற்படி செலவு என்பது தமது ஒருமாத ஊதியத்தைவிடவும் மிகவும் அதிகம் என்ற போதிலும் மாணவர்களின் கல்வி நலனுக்காக தம்மால் இந்த உதவி செய்ய முடிந்ததை எண்ணி பெருமையடைவதாகவும் மேலும் பல NGO தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்களின் உதவியால் இன்னும் பல மாணவர்களுக்கு உதவியைப் பெற்று வழங்கிட முயற்சிப்பதாகவும் அந்த ஆசிரியை தெரிவித்துள்ளார்.
கணித பாடம் பயில்வதற்கு மாணவர்களிடம் சுணக்கம் இல்லாத தொடர் பங்கேற்பு அவசியம் என்பதால் இந்த உதவியை மனமுவந்து செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.