Skip to main content

வாழும் உரிமையை போல ஆளும் உரிமையும் இந்தியப் பெண்களுக்கு சாத்தியமாகட்டும்! ராமதாஸ்

Published on 07/03/2020 | Edited on 07/03/2020

 

வாழும் உரிமையை போல ஆளும் உரிமையும் இந்தியப் பெண்களுக்கு சாத்தியமாகட்டும் என உலக மகளிர் தினத்தையொட்டி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், உலகின் ஆக்கும் சக்தியாகவும், காக்கும் சக்தியாகவும் திகழும் மகளிரை பெருமைப்படுத்தும் வகையில் உலக மகளிர் நாள் நாளை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் குடும்ப முன்னேற்றத்திற்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும் பங்களிக்கும் மகளிர் சமுதாயத்திற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


 

ramadoss



மகளிர் நாள் நூற்றாண்டுகளைக் கடந்த வரலாறு கொண்டதாகும். 1789 ஆம் ஆண்டில் பிரெஞ்சுப் புரட்சியின்போது சமத்துவம், சுதந்திரத்துவம், வாக்குரிமை ஆகிய மூன்றையும் வலியுறுத்தி பாரிஸ் நகரில் பெண்கள் போராடத் தொடங்கியது தான் மகளிர் நாள் கொண்டாடப்படுவதற்கான தொடக்கம் ஆகும். அதன் பின் உலகம் முழுவதும் உள்ள மகளிர் தங்களின் கோரிக்கைக்காக குரல் கொடுத்த நிலையில் 1911 ஆம் ஆண்டில் தான் சர்வதேச மகளிர் நாளை ஐ.நா. அமைப்பு முறைப்படி அறிவித்தது.

 

ஒரு காலத்தில் மகளிர் இரண்டாம் தர குடிமக்களாகவும், அடிமைகளாகவும் நடத்தப்பட்டனர். கல்வி உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் அவர்களுக்கு மறுக்கப்பட்டன. சமயலறைகள் மட்டும் தான் அவர்கள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட்ட பகுதிகளாக இருந்தன. ஆனால், அதன்பின் சட்டப் போராட்டங்களாலும், உரிமைப் போராட்டங்களாலும் அவர்கள் ஒன்றன் பின் ஒன்றாக உரிமை பெற்றனர்.  இன்று அனைத்துத் துறைகளிலும் வெற்றி பெற்று சாதனையாளர்களாக திகழ்கின்றனர். அடிமையாகக் கிடந்த மகளிருக்கு முழுமையாக வாழ்வுரிமையை வழங்குவதற்கே ஒரு நூற்றாண்டு ஆகியிருக்கிறது.

 

தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய மகளிருக்கு வாழும் உரிமை கிடைத்திருக்கும் போதிலும், ஆளும் உரிமை இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை. உள்ளாட்சிகளில் மகளிருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்க  வேண்டும் என்ற கோரிக்கையே தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டும் தான் நிறைவேற்றப் பட்டுள்ளது. சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றங்களில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை கால் நூற்றாண்டாக எழுப்பப்பட்டு வரும் போதிலும், அது இன்னும் செயல்வடிவம் பெறவில்லை. இந்த விஷயத்தில் தேசியக் கட்சிகளுக்கு போதிய அக்கறை இல்லை.

 

போர்முனையில் இராணுவத்தை தலைமையேற்று நடத்தும் உரிமையை பெண்களுக்கு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. நாட்டைக் காக்கும் பெண்களால் நாட்டை நிர்வகிக்கவும் முடியும். அதற்காக சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றங்களில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்குவது காலத்தின் கட்டாயமாகும். ஆகவே, மகளிருக்கு அதிகாரமளிப்பதற்காக 33% இடஒதுக்கீடு வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள இந்நாளில் அனைவரும் உறுதியேற்போம். இவ்வாறு கூறியுள்ளார். 


 

சார்ந்த செய்திகள்