திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த ஆலங்காயம் ஒன்றியத்துக்கு உட்பட்டது வளையாம்பட்டு ஊராட்சி. இந்தக் கிராம ஊராட்சியில் 12 வார்டுகள் உள்ளன. அதில் 8வது வார்டு உறுப்பினராக சோபியா நவீன் குமார் என்பவர் வெற்றிபெற்றார். ஊராட்சி மன்ற துணைத் தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் போட்டியிட்ட சோபியா நவீன்குமார், 12 உறுப்பினர்களில் 7 உறுப்பினர்களின் வாக்குகளைப் பெற்று துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பதவிக்கு வந்து சில மாதங்களேயான நிலையில், திடீரென தனது பதவியை ராஜினாமா செய்த கடிதத்தை ஆலங்காயம் வட்டார அலுவலரிடம் வழங்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சோபியா கூறியதாவது, “என்னை ராஜினாமா செய்யச்சொல்லி தொடர்ந்து சிலர் வற்புறுத்தினர். அவர்களின் தொந்தரவு தாங்க முடியாததால் நான் ராஜினாமா செய்துவிட்டேன்” என்றார்.
தேர்தல் மூலம் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது முதல் 9வது வார்டு உறுப்பினரான கிருஷ்ணன் மற்றும் அவருக்கு நெருக்கமான ஊரின் முக்கிய பிரமுகரான சதாசிவம் இருவரும் சோபியாவை ராஜினாமா செய்ய வேண்டுமென நெருக்கடி தந்துள்ளனர். கடந்த டிசம்பர் 16ஆம் தேதி சோபியா வீட்டுக்கே வந்து எழுதி வைத்திருந்த ராஜினாமா கடிதத்தில் கையெழுத்திட வைத்துள்ளனர். பின்னர் அவரை அழைத்துவந்து ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசனிடம் ராஜினாமா கடிதத்தைக் கொடுக்க வைத்தனர். கடிதம் தந்துவிட்டு வெளியே வந்த சோபியா, தனக்குப் பிறர் நெருக்கடி தந்ததாலேயே ராஜினாமா செய்தேன் என நேரடியாக சொல்லி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஆதிக்க சாதியினர் அவருக்கு நெருக்கடி தந்து ராஜினாமா செய்யவைத்துள்ளார்கள் என தகவல் வெளியானது. இதனால் தற்போது அந்தக் கடிதத்தை ஏற்றுக்கொள்ளாமல் அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.