22ம் தேதி பால் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் சூழலில் வரும் (22.03.2020) ஞாயிற்றுக்கிழமை காலை 7.00மணி முதல் இரவு 9.00மணி வரை பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் நேற்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதே நேரத்தில் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தடையில்லாமல் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது பொதுமக்களிடையே மட்டுமின்றி சேவை சார்ந்த தொழிலான பால் வணிகத்தில் ஈடுபட்டு வரும் பால் முகவர்களான எங்களையும் மிகுந்த குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஏனெனில் பால் விநியோகம் என்பது அதிகாலை சுமார் 3.00மணிக்கு தொடங்கி காலை 8.00மணிக்கு மேலும் தொடரும். அதுமட்டுமின்றி தமிழகத்தில் நாளொன்றுக்கு விற்பனையாகும் சுமார் 1.5கோடி லிட்டர் பாலையும் பொதுமக்களுக்கு காலை 7.00மணிக்குள் கொண்டு போய் சேர்ப்பது என்பதும் இயலாத காரியமாகும்.
மேலும் சில்லரை வணிக நிறுவனங்கள் திறந்திருக்கும்பட்சத்தில் தான் பால் விநியோகத்தை பால் முகவர்களால் தங்குதடையின்றி செய்திட முடியும். அப்படி சில்லரை வணிக நிறுவனங்கள் திறந்திருந்தால் பொதுமக்கள் நடமாட்டம் என்பது இருந்து கொண்டே இருக்கும். அப்படி பொதுமக்கள் நடமாட்டம் இருந்து கொண்டிருக்கும் பட்சத்தில் மக்கள் நலன் சார்ந்த பாரதப் பிரதமரின் நல்லெண்ண நடவடிக்கை ஈடேறாமல் போய் விடும் அபாயம் உள்ளது.
எனவே கொரோனா வைரஸ் பரவலை தடுத்திட மக்களை தன்னார்வத்தோடு தனிமைப்படுத்திட மத்திய அரசு எடுக்கும் நல்லெண்ண நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 1.5லட்சம் பால் முகவர்களும் வரும் 22ம் தேதி காலை 7.00மணிக்கு மேல் முற்றிலுமாக பால் விநியோகத்தில் ஈடுபடப் போவதில்லை என்கிற கசப்பான முடிவை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் எடுக்கப்பட்டுள்ளது.
எனவே மக்கள் நலன் சார்ந்து மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நல்லெண்ண அடிப்படையில் எடுக்கப்பட்டிருக்கும் எங்களது சங்கத்தின் முடிவிற்கு ஆதரவளிப்பதோடு, இந்த அசெளகரியங்களை சற்று பொறுத்தருள்மாறு பொதுமக்களை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
அதே நேரத்தில் அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பால் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி கிடைத்திட ஏதுவாக தமிழகம் முழுவதும் 21ம் தேதி சனிக்கிழமையன்று காலை, மாலை என இருவேளைகளில் கூடுதலாக பால் கொள்முதல் செய்து அன்றைய தினம் இரவு கூடுதல் நேரமும், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.00மணி முதல் காலை 6.30மணி வரையிலும் பால் விநியோகம் செய்திடும் பணியை பால் முகவர்கள் மேற்கொள்வார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் பாரதப் பிரதமர் அவர்களின் வேண்டுகோள் அடிப்படையிலும், மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் நல்லெண்ண அடிப்படையிலான நடவடிக்கைகளுக்கும் துணை நிற்கும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் அறிவிப்பிற்கு தமிழக அரசின் ஆவின் நிறுவனமும், தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.00மணி முதல் மாலை 5.00மணி வரை பொதுமக்கள் நடமாட்டத்தை தவிர்த்திடும் வகையில் பால் முகவர்களுக்கு சனிக்கிழமை அன்று காலை மற்றும் மாலை என இரு வேளை பால் கொள்முதல் செய்திட வசதியாக முன்னேற்பாடுகளை ஆவின் மற்றும் தனியார் பால் நிறுவனங்கள் செய்து தருமாறு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.