தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. கரோனா சூழலையும் பெரிதாக பார்க்காமல் அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த முறை அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த தேமுதிக, இம்முறை அதிமுக கூட்டணியில் இருந்து விலகியதாக அறிவித்த பின்னர், அமமுகவுடன் இணைந்தது. இந்நிலையில் எழும்பூரில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரண்டாவது நாளாக பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது விஜயகாந்த் தனது பழைய பிரச்சார பேச்சுகளை ஒலிக்கச் செய்தபடி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தமிழகத்தின் முதல் தொகுதியான கும்மிடிப்பூண்டியில், தேமுதிக வேட்பாளர் கெ.எம். டில்லியை ஆதரித்து நேற்று முன்தினம் (24.03.2021) தனது முதல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். இதனைத் தொடர்ந்து நேற்று மாலை 4 மணி அளவில், சென்னை எழும்பூர் தொகுதி தேமுதிக வேட்பாளர் பிரபுவை ஆதரித்து, எழும்பூர் தொகுதிக்குட்பட்ட சேத்துப்பட்டு, சூளை என முக்கிய பகுதிகளில் தனது பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
பிரச்சாரம் தொடங்கியபோது, நின்றபடி தொண்டர்களுக்கு கையசைத்து வாக்கு சேகரித்த விஜயகாந்த், பின்னர் வேனின் முன்பக்கம் அமர்ந்தபடி அனைவருக்கும் கையசைத்தார். அப்போது கடந்த தேர்தல்களின் பிரச்சார மாநாடுகளில் விஜயகாந்த் மக்களிடம் பேசிய பழைய பேச்சுகள் ஒலிக்கப்பட்டன. இந்தப் புதிய முயற்சி நல்ல வரவேற்பை பெற்றது.