நடந்து முடிந்த இடைத்தேர்தலில் திமுக சார்பாக அரவக்குறிச்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் செந்தில் பாலாஜி. அதற்கு முன்பு அதிமுகவில் போக்குவரத்துறை அமைச்சராகவும் இருந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் எடப்பாடி அணி, தினகரன் அணி என்று பிரிந்த போது தினகரனுக்கு ஆதரவாக சென்றார். தினகரனுக்கு ஆதரவாக 18 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுத்ததால் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் ஒருவராக செந்தில் பாலாஜி இருந்தார். பின்பு தினகரனிடம் பிரிந்து திமுகவில் ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தார். திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜிக்கு கரூர் மாவட்ட பொறுப்பாளராகவும் பதவி வழங்கப்பட்டது. பிறகு அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அப்போது நடைபெற்ற இடைத்தேர்தலின் போது, எல்லோருக்கும் 3 சென்ட் நிலம் இலவசமாகக் கொடுப்பேன் என்று வாக்கு உறுதி அளித்தார். மேலும் இடைத்தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்த உடன் அனைவருக்கும் 3 சென்ட் நிலம் கண்டிப்பாக வழங்குகிறேன் என்று கூறியுள்ளார். ஆனால் இடைத்தேர்தலுக்கு பிறகு அதிமுக ஆட்சி தொடர்வதால் தேர்தல் நேரத்தில் கூறியபடி 3 சென்ட் நிலத்தை மக்களுக்கு அளிக்க இயலவில்லை. இதனால் மக்கள் அவர் மீது அதிருப்தியில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அவர் தொகுதிக்குட்பட்ட நெடுங்கூர் பகுதிக்கு சென்ற போது, 3 சென்ட் நிலம் தருவதாக சொன்ன செந்தில்பாலாஜி எங்கே, 3 சென்ட் நிலம் எங்கே என்று பதாகையுடன் கேள்வி எழுப்பினர். இதனை எதிர்பார்க்காத செந்தில் பாலாஜிக்கு இந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது.