மதிமுகவில் குழப்பம் விளைவிக்கும் நோக்கிலேயே துரைசாமி கடிதம் எழுதியுள்ளதாக துரை வைகோ சாடியுள்ளார்.
மதிமுக அவைத் தலைவர் துரைசாமி பொதுச்செயலாளர் வைகோவிற்கு, “தங்களின் சமீபகால நடவடிக்கைகளால் கட்சிக்கும் தங்களுக்கும் மக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. சந்தர்ப்பவாத சுயநல அரசியலுக்கு தாங்களும் அப்பாற்பட்டவர் இல்லை என்பதை கட்சியினர் அறிந்துள்ளனர். கடந்த 30 ஆண்டுகளாக உங்கள் உணர்ச்சிமிக்க பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்த கட்சியினர் மேலும் மேலும் ஏமாற்றம் அடையாமல் இருக்க கட்சியை தாய்க்கட்சியான தி.மு.க.வில் இணைத்து விடுவது சமகால அரசியலுக்கு சாலச்சிறந்தது” என்று கடிதம் எழுதியுள்ளார். இது கட்சி வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அவைத்தலைவர் துரைசாமி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், கடிதத்திற்கு வைகோவின் பதிலுக்காக காத்திருப்பதாகவும் துரைசாமி தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில், கட்சியில் குழப்பம் விளைவிக்கும் நோக்கத்திலேயே திருப்பூர் துரைசாமி கடிதம் எழுதியுள்ளதாக மதிமுக தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ தெரிவித்திருக்கிறார். மேலும், அவர் இந்த கடிதத்தை புறக்கணிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.