Skip to main content

“ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்றுவாரா எடப்பாடி பழனிசாமி?”  சிறுபான்மையினர் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கேள்வி

Published on 08/01/2021 | Edited on 08/01/2021

 

Will Edappadi Palanisamy fulfill Jayalalithaa's dream? MK Stalin's question at the minority meeting

 

06.01.2021 அன்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தி.மு.கவின் சிறுபான்மையினர் அணி சார்பில் சென்னை ஒய்.எ.ம்.சி.ஏ. திடலில் நடைபெற்ற கருத்தரங்கிற்குத் தலைமையேற்று பேசினார். அதில் அவர், “கலைஞர் முந்தைய தேர்தலில் ஒதுக்கிய இடங்களைச் சுட்டிக்காட்டி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் முகைதீன், வெளிப்படையாகவே சுட்டிக்காட்டி, என்னிடம் உள்ள உரிமையின் காரணமாக கேட்டார். இடம் குறித்துக் கவலை கொள்ள வேண்டாம். நாம் ஆட்சியமைக்கப் போகிறோம். அதுதான் முக்கியம். நல்லாட்சி மலர்ந்திட - இதயங்களை இணைப்போம் என்ற முழக்கத்தோடு தி.மு.க. சிறுபான்மையினர் அணி சார்பில் இந்த சிறப்பான கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ள சிறுபான்மைப் பிரிவின் செயலாளர் டாக்டர் மஸ்தானை மனதாரப் பாராட்டுவதுடன், எனது நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். காலத்தின் தேவையறிந்து இந்தக் கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளார்.

 

இந்த கூட்டத்தைப் பார்க்கும்போது இது சிறுபான்மையினர் அணி நடத்தும் நிகழ்ச்சி போல இல்லை. பெரும்பான்மை மக்கள் அனைவரும் சேர்ந்து நடத்தும் நிகழ்ச்சியாகத்தான் இருக்கிறது. அந்த வாய்ப்பை உருவாக்குவதற்காகத்தான் நாம் இங்கே கூடியிருக்கிறோம். ஒருவரை ஒருவர் பிணைப்பதற்காகத்தான் நாம் கூடியிருக்கிறோமே தவிர, பிரிப்பதற்காக அல்ல. வேறு வேறு இறை நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தாலும், நாம் அனைவரும் தமிழர்கள். தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள். கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்த குடியினர். அந்த உணர்வை நாம் பெற்றால் நம்மை யாரும் பிரிக்க முடியாது. வீழ்த்த முடியாது.

 


நம்மை யாராலும் வீழ்த்த முடியாது என்பதன் அடையாளமாகத்தான் இந்தத் திடலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டுள்ள இந்தக் காட்சியும், இந்த மேடையில் அனைத்து மத நம்பிக்கையாளர்களும் அமர்ந்திருக்கும் காட்சியும் ஆகும். அனைத்து மதங்களின் ஒற்றுமையில்தான் மக்களின் ஒற்றுமை அடங்கி இருக்கிறது. மக்களின் ஒற்றுமையில்தான் மதங்களின் ஒற்றுமையும் அடங்கி இருக்கிறது. அனைத்து மதங்களும் அன்பைப் போதிப்பதற்காக உருவாக்கப்பட்டவை என்றால் அதற்குள் பிளவுசக்திகள், பிரிவினை சக்திகள் செயல்படுவது அந்தந்த மதங்களுக்கே விரோதமான கொள்கை என்பதை உணர்ந்தவர்கள் இந்த மேடையில் கூடியிருக்கிறோம்.

 

இதயங்களை இணைப்போம் என்று மட்டும் சொல்லாமல், ‘நல்லாட்சி மலர்ந்திட இதயங்களை இணைப்போம்’ என்று டாக்டர் மஸ்தான் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். நல்லாட்சி மலர்ந்துவிட்டாலே இதயங்கள் இணைந்துவிடும். இதயங்கள் இணைந்துவிட்டாலே நல்லாட்சி மலர்ந்துவிடும். இரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்ததுதான். நல்லாட்சி மலர்ந்துவிடக்கூடாது என்று நினைக்கும் சிலர்தான் இந்த நாட்டு மக்களைப் பிரிக்கிறார்கள். இதயங்கள் இணைந்துவிடக் கூடாது என்று நினைக்கும் சிலர்தான் நல்லாட்சி மலர்ந்து விடக்கூடாது என்று தடுக்கவும் சதித்திட்டம் போடுகிறார்கள். இந்தக் கூட்டத்தின் வாயிலாக இதயங்கள் இணைந்துவிட்டது என்பதை நீங்கள் சுட்டிக் காட்டிவிட்டீர்கள்.

 

இன்னும் நான்கு மாதத்தில் நல்லாட்சி மலர்ந்துவிடும் என்ற நம்பிக்கை அதிகமாகி விட்டது. இதயங்களை இணைப்பதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம்தான் திராவிட இயக்கம். சாதியால், மதத்தால் தமிழினத்தைப் பிளவுபடுத்திச் சிலர் குளிர்காய நினைத்தபோது, தமிழர்கள் இனத்தால் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்று ஒலித்த குரல்தான் தந்தை பெரியாரின் குரல், பேரறிஞர் அண்ணாவின் குரல், முத்தமிழறிஞர் கலைஞரின் குரல். கண்ணியத்துக்குரிய காயிதேமில்லத் அவர்களின் குரலும் அதுதான். பிளவுபட்டுக் கிடக்கும் ஒரு இனத்தை அந்தப் பிளவுகளுடன் சேர்த்து முன்னேற்ற முடியாது என்று நம்முடைய தலைவர்கள் சுட்டிக் காட்டினார்கள்.

 

அந்த அடிப்படையில் தமிழர்களாக நாம் ஒன்றுபட்டோம். இப்படித் தமிழர்களாக ஒன்றுபடுவதற்கு யாருடைய இறைநம்பிக்கையும் தடையாக இருந்ததில்லை. இறைநம்பிக்கை என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது. அதனால்தான், தந்தை பெரியார், 'பக்தி என்பது தனிச்சொத்து, ஒழுக்கம் என்பது பொதுச்சொத்து' என்று சொன்னார். 'பக்திப் பிரச்சாரம் நாடு முழுவதும் நடக்கட்டும், பகுத்தறிவுப் பிரச்சாரமும் நாடு முழுவதும் தொடரட்டும்' என்று முத்தமிழறிஞர் கலைஞர் சொன்னார். இரண்டு பிரச்சாரமும் கருத்து விவாதமாக இருக்கலாமே தவிர, கைகலப்பு மோதலாக மாறிவிடக் கூடாது என்பதில் திராவிட இயக்கம் தெளிவாக இருந்தது.

 

அதனால்தான் பெரியார் மண்ணில் எந்தக் கோவிலுக்கும் எந்த சேதாரமும் ஏற்பட்டது இல்லை. ஆனால், இன்றைக்கு பக்தியை வியாபாரப் பொருளாக, அதுவும் அரசியல் வியாபாரப் பொருளாக ஆக்குவதற்கு சிலர் முயற்சிக்கிறார்கள். அவர்களுக்கு, சொல்வதற்கு சாதனைகளோ, கொள்கையோ இல்லாததால் மக்களின் ஆன்மிக உணர்வைத் தூண்டிவிட்டுக் குளிர்காய நினைக்கிறார்கள். அரசியலுக்கும் ஆன்மிகத்துக்குமான வேறுபாட்டை நன்கு உணர்ந்தவர்கள் தமிழக மக்கள். அவர்களை யாரும் ஏமாற்ற முடியாது.

 

அரசியல் என்பது மக்களின் உரிமை சார்ந்தது. ஆன்மிகம் என்பது மனம் சார்ந்தது. இந்த இரண்டையும் ஒன்றாகச் சேர்ந்து குழப்பவும் முடியாது. இரண்டையும் ஒன்றோடு ஒன்று சேர்த்து ஏமாற்றவும் முடியாது. இது தமிழக அரசியல் களத்தில் நிரூபிக்கப்பட்ட உண்மையாகும். சிறுபான்மை இயக்கத்துக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்குமான நட்பு என்பது காலம் காலமாகத் தொடர்வது ஆகும். தொப்புள் கொடி உறவு போன்றது என அனைவரும் இங்கே சுட்டிக்காட்டினார்கள். தலைவர் கலைஞர் அவர்களே அடிக்கடி சொல்வார்கள்: 'நான் சிறு வயது இளைஞனாக இருந்தபோது ஒரு கையில் ‘குடி அரசு’ இதழையும் இன்னொரு கையில் ‘தாருல் இஸ்லாம்’ இதழையும் வைத்துக்கொண்டு திருவாரூரில் வலம் வந்தேன்'' என்று குறிப்பிடுவார்கள்.

 

‘தந்தை பெரியாரைப் போலவே, என்னுள் சிந்தனை மாற்றம் ஏற்படுத்தியவர்களில் பா.தாவூத் ஷாவுக்கும் பங்குண்டு’ என்று கலைஞரே சொல்லியிருக்கிறார். பேரறிஞர் அண்ணா அவர்களையும் தலைவர் கலைஞர் அவர்களையும் இணைக்க, பாலமாக இருந்ததே இஸ்லாமிய சமுதாயம்தான். திருவாரூரில் நடந்த மிலாதுநபி விழாவுக்குப் பேச வந்த பேரறிஞர் அண்ணா அவர்கள், ‘இந்த ஊரில் கலைஞர் என்றால் யார்? அவரை அழைத்து வாருங்கள்’ என்று சொல்லி அழைத்துள்ளார். இருவரும் முதன்முதலாக சந்திக்கக் காரணமாக இருந்தது மிலாதுநபி விழாதான்.

 

பள்ளிக் காலத்தில் கலைஞருக்கு உற்ற தோழனாய் இருந்து உதவி செய்தவர் அசன் அப்துல் காதர். கையெழுத்து இதழாக இருந்த ‘முரசொலி’யை அச்சில் வெளியிடக் கலைஞர் திட்டமிட்டபோது அதனை அச்சிட்டுக் கொடுத்தவர் கருணை ஜமால். உள்ளூரில் எழுதிக் கொண்டு இருந்த கலைஞரை சேலம் மார்டன் தியேட்டர்ஸூக்கு அழைத்துச் சென்று மாபெரும் கதை வசன கர்த்தாவாக ஆக அடித்தளம் இட்டவர் கவிஞர் காமு ஷெரீப். கலைஞர் என்ற ஒரு தலைவரை தனது காந்தக் குரலால் தமிழ்நாடு முழுவதும் கொண்டு சேர்த்தவர் இசை முரசு நாகூர் அனீபா அவர்கள். இப்படி, கலைஞர் அவர்களின் வாழ்க்கையோடு இணைந்தும் பிணைந்தும் இருந்தவர்கள் இசுலாமிய தோழர்கள். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் தலைவர் ஆகியோருடன் இணைத்து கண்ணியத்துக்குரிய காயிதேமில்லத் படமும் இங்கே வைக்கப்பட்டுள்ளது. ஏன் இப்படி வெளியிட்டுள்ளோம் என்றால், காயிதே மில்லத் அவர்களும் நம்முடைய தலைவர்களுடைய வரிசையில் வைத்து போற்றப்பட வேண்டிய மாபெரும் தலைவர்.

 

காயிதேமில்லத் தன்னுடைய மதத்தை மட்டுமல்ல, இந்திய நாட்டையும், தாய்மொழியாம் தமிழ் மொழியையும் காப்பாற்றத் தொண்டு செய்தவர் ஆவார். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தைத் தயாரிக்கும் அவையில் இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தியைக் கொண்டு வர சிலர் முயற்சித்தார்கள். அப்போது கடுமையாக எதிர்த்தவர் நம்முடைய காயிதேமில்லத் அவர்கள். இந்தியை ஆட்சி மொழியாக ஆக்கக் கூடாது என்று சொன்னவர் மட்டுமல்ல, தமிழைத்தான் ஆட்சி மொழி ஆக்க வேண்டும் என்று சொன்ன தமிழ் வீரர்தான் நம்முடைய காயிதே மில்லத் அவர்கள். ''வளம் செறிந்ததும், தொன்மை நிறைந்ததுமான எனது தாய்மொழியுமான தமிழ் மொழியே ஆட்சி மொழியாகலாம்" என்று சொன்னவர் காயிதே மில்லத். அத்தகைய தமிழ் உணர்ச்சிதான், தாய் மொழிப்பற்றுதான், தமிழின உணர்வுதான் இன்றைக்கு நமக்கு முக்கியமான தேவை.

 

1965ஆம் ஆண்டு பாகிஸ்தான் மூலமாக இந்தியாவுக்கு அச்சுறுத்தல் வந்தபோது, பாகிஸ்தான் நாட்டை கடுமையாக விமர்சித்தவர் காயிதே மில்லத் அவர்கள். இந்தியாவைக் காக்கத் துடித்தவர் காயிதே மில்லத். தமிழ்நாட்டின் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை 1967ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் உருவாக்கியது திராவிட முன்னேற்றக் கழகம். அந்த மாற்றத்தை உருவாக்க பேரறிஞர் அண்ணாவுக்கு அப்போது தோள் கொடுத்து நின்றவர் கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத். விருகம்பாக்கம் மாநாட்டில் கலந்துகொண்ட காயிதேமில்லத் அவர்கள், ''பேரறிஞர் அண்ணா அவர்கள் உங்கள் தலைவர் மட்டுமல்ல, எங்கள் தலைவர்" என்று குறிப்பிட்டார்கள்.

 

1972ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ஆம் நாள் காயிதேமில்லத் அவர்கள் மறைந்தார்கள். அவரது உடல்நிலை மோசமடைந்து வருகிறது என்ற செய்தி கிடைத்தபோது முதலமைச்சர் கலைஞர், கோவையில் இருந்தார்கள். செய்தி கேள்விப்பட்டதும் மற்ற நிகழ்ச்சிகள் அனைத்தையும் தள்ளி வைத்துவிட்டு சென்னை வந்த முதலமைச்சர் கலைஞர், ஸ்டேன்லி மருத்துவமனைக்குச் சென்றார். ‘கேரள சிங்கம்’ என்று போற்றப்பட்ட முகமது கோயா, அப்துல் சமது, அப்துல் சமது, அப்துல் லத்தீப் போன்றவர்கள் அப்போது இருந்தார்கள். கண்மூடிப் படுத்திருக்கிறார் காயிதேமில்லத். அப்போது முதலமைச்சர் கலைஞர், ''அய்யா! நான் கலைஞர் வந்திருக்கிறேன்" என்று சொல்லியிருக்கிறார்கள். லேசாகக் கண் திறந்து பார்க்கிறார் காயிதேமில்லத். முதலமைச்சர் கலைஞரைப் பார்த்தார். கை நீட்டி கலைஞரின் கையைப் பிடிக்கிறார்.

 

''முஸ்லிம் சமுதாயத்துக்குத் தாங்கள் செய்த உதவிக்கெல்லாம் எனது நன்றி" என்று காயிதேமில்லத் சொன்னார். இதைக் கலைஞர் சொல்லி நான் கேட்டிருக்கிறேன். காயிதேமில்லத் நன்றி சொன்னது, அதுவரை செய்த நன்மைகளுக்காக. இதை விட அதிகமான நன்மைகளை அடுத்தடுத்து முதலமைச்சர் கலைஞர் செய்தார். 1947 முதல் 1962 வரை தமிழகத்தில் இசுலாமிய அமைச்சர் இல்லை. பேரறிஞர் அண்ணா தான், இசுலாமிய சமூகத்துக்கு அமைச்சர் பதவி தர வேண்டும் என்று கோரிக்கையை வைத்தார். காங்கிரஸ் ஆட்சிக் காலம் அது. கடையநல்லூர் அப்துல் மஜீத் அதன்பிறகுதான் அமைச்சர் ஆக்கப்பட்டார். எதிர்க்கட்சியாக இருந்தபோதே சிறுபான்மையினர் உரிமைக்கு குரல் கொடுத்த கழகம், ஆட்சி அமைத்த பின்னர் ஏராளமான சாதனைகளைச் செய்து கொடுத்தது. உதாரணத்திற்கு சிலவற்றை மட்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

 

1989 ஆம் ஆண்டு சிறுபான்மையினர் நல ஆணையத்தை அமைத்தவர் முதலமைச்சர் கலைஞர்.

1990 ஆம் ஆண்டு அப்துல் ஜாபர் தலைமையில் சிறுபான்மையினர் நலக்குழுவை அமைத்தவர் முதலமைச்சர் கலைஞர்.


1999 ஆம் ஆண்டு தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் அமைத்தவர் முதலமைச்சர் கலைஞர்.


2000 ஆம் ஆண்டில் உருது அகாடமி தொடங்கியவர் முதலமைச்சர் கலைஞர்.


தமிழ்நாடு வக்பு வாரிய நிர்வாகச் செலவுக்காக தமிழக அரசின் சார்பில் நிதி வழங்கியவர் முதலமைச்சர் கலைஞர்.


ஹஜ் மானியத்தை அதிகப்படுத்தியவர் முதலமைச்சர் கலைஞர்.


2002 ஆம் ஆண்டு சமூக சீர்திருத்தத் துறையைத் தோற்றுவித்தவர் முதலமைச்சர் கலைஞர்.


நபிகள் நாயகம் பிறந்தநாளை அரசு விடுமுறையாக அறிவித்தவர் முதலமைச்சர் கலைஞர்.


சிறுபான்மையின மாணவியர் விமானப் பணிப்பெண் பயிற்சி பெற இலவச வசதிகளைச் செய்து கொடுத்தவர் முதலமைச்சர் கலைஞர்.


பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இசுலாமியர்க்கு 3.5 சதவிகித இடஒதுக்கீட்டை 2007 ஆம் ஆண்டு வழங்கியவர் முதலமைச்சர் கலைஞர்.


2007 ஆம் ஆண்டு சிறுபான்மையினர் நல இயக்ககம் அமைத்தவர் முதலமைச்சர் கலைஞர்.


2010 ஆம் ஆண்டு தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையச் சட்டம் கொண்டுவந்தவர் முதலமைச்சர் கலைஞர்.

 

இவை சிறுபான்மை இன மக்களுக்காகச் செய்யப்பட்டவை மட்டும்தான். இப்படி ஒவ்வொரு பிரிவு மக்களுக்கும் திட்டங்களைக் கொண்டு வந்தவர் முதலமைச்சர் கலைஞர். சிறுபான்மையினருக்குத் துரோகம் செய்த அரசுதான் இன்றைய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு. சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு அரணாக இருப்போம் என்று பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தலே பா.ஜ.க.வும் அ.தி.மு.க.வும்தான். என்னென்னவோ வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சிக்கு வந்தது பா.ஜ.க. ஆனால், அதில் எதையும் நிறைவேற்றவில்லை. ஆனால் சொல்லாத பல விஷயங்களைச் செய்து வருகிறார்கள். இந்திய அரசாங்கத்தையே கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்கும் அரசாக மாறிக்கொண்டிருக்கிறது பா.ஜ.க. அரசு. பாஜக அரசுக்கு ஜனநாயகத்தைப் பற்றியோ, சமத்துவம் பற்றியோ, சகோதரத்துவம் பற்றியோ, மதநல்லிணக்கம் பற்றியோ கவலை இல்லை. இத்தகைய பா.ஜ.க. அரசுக்கு தலையாட்டும் பொம்மை அரசாக இருக்கிறது அ.தி.மு.க. அரசு.

 

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் தீர்மானமா, அ.தி.மு.க. ஆதரிக்கிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டமா, அ.தி.மு.க. ஆதரிக்கிறது. முத்தலாக் சட்டமா, அ.தி.மு.க. ஆதரிக்கிறது. இதை விட அண்ணாவுக்கு செய்யும் துரோகம் இருக்க முடியுமா. இதை விட சிறுபான்மையினருக்கு செய்யக்கூடிய வேறு துரோகம் செய்ய முடியுமா.  ''காஷ்மீருக்கான சிறப்புரிமையை ரத்து செய்வதை எதற்காக ஆதரித்தீர்கள்?'' என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைக் கேட்கிறார்கள். 'இதுதான் ஜெயலலிதாவின் கொள்கை, அவரது கனவு இது' என்று சொன்னார் பழனிசாமி. 1999ஆம் ஆண்டு சென்னை கடற்கரையில் நடந்த கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, 'என் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்ததுதான். அதற்காக பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இனி பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவே மாட்டேன்' என்று சொன்னார். இது பழனிசாமிக்குத் தெரியுமா? ஜெயலலிதாவின் இந்தக் கனவை பழனிசாமி காப்பாற்றுவாரா?

 

நாடாளுமன்றத்தில் முத்தலாக் தடை மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. அதனை ஆதரித்து நாடாளுமன்றத்தில் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் பேசியிருக்கிறார். இத்தகைய அ.தி.மு.க.வுக்கு சிறுபான்மையினரைப் பற்றிப் பேச எந்த அருகதையும் இல்லை. மத்திய அரசு கொண்டுவரத் திட்டமிட்டிருக்கும் குடியுரிமைச் சட்டமானது இசுலாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினரையும், ஈழத்தமிழர்களையும் மட்டுமல்ல இங்குள்ள தமிழர்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தப்போகும் சட்டம் ஆகும். அதனால்தான் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்த்தோம். மாபெரும் போராட்டங்களை நடத்தினோம். மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தினோம். கோடிக்கணக்கான கையெழுத்துக்களுடன் குடியரசுத் தலைவரையே சந்தித்தோம். மக்களவையில் பா.ஜ.க.,வுக்கு அறுதிப்பெரும்பான்மை இருப்பதால் அந்தச் சட்டம் நிறைவேறியது. மாநிலங்களவையில் நிறைவேறியதற்குக் காரணம், அ.தி.மு.க. அளித்த 11 வாக்குகள், அவர்களோடு சேர்ந்து அன்புமணி அளித்த ஒரு வாக்கு. இந்த 12 வாக்குகளும் சேர்ந்து அந்தத் துரோகச் சட்டம் நிறைவேறக் காரணம் ஆனது.

 

அந்த குடியுரிமைச் சட்டத்தையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆதரித்தார். அந்த சட்டத்தால் யாருமே பாதிக்கப்படவில்லையே என்று ஏதோ தீர்க்கதரிசி போலப் பேசினார் முதலமைச்சர். அந்த சட்டம் அமலுக்கு வந்து கணக்கெடுப்பு எடுக்கப்பட்டால் பலரும் குடியுரிமை இழப்பார்கள். இந்த நடைமுறை கூடத் தெரியாமல், கேட்ட பழனிசாமிக்கு சிறுபான்மையினரைப் பற்றிப் பேச எந்த அருகதையும் இல்லை. இது சிறுபான்மையினருக்கும், தமிழருக்கும் சேர்த்து செய்யப்பட்ட இரட்டைத் துரோகம். இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் இரண்டு திருத்தங்களைச் செய்ய மாநிலங்கள் அவையில் நம்முடைய உறுப்பினர் திருச்சி சிவா கொடுத்தார். பிற மதத்தவரைப் போல இசுலாமியர்களையும் இணைக்க வேண்டும், நாடுகள் வரிசையில் இலங்கை நாட்டை இணைக்க வேண்டும் என்பதுதான் அந்த இரண்டு திருத்தங்கள்.

 

அந்த திருத்தங்கள் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது தோற்கடிக்கப்பட்டது. தோற்கடிக்கப்பட்டது என்றால் தோற்கடித்த வாக்குகள் யாருடைய வாக்குகள்? அ.தி.மு.க.வின் 11 வாக்குகள், பாமகவின் ஒரு வாக்கு. அதாவது இசுலாமியர் பெயரையும் ஈழத்தமிழர் பெயரையும் சேர்க்க வேண்டும் என்பதற்கு எதிராக வாக்களித்தவர்கள் அ.தி.மு.க.வும் பா.ம.க.வும். இதைத்தான் தமிழினத் துரோகம் என்று சொல்கிறேன். இப்படிப்பட்ட துரோக அரசுதான் எடப்பாடி பழனிசாமியின் அரசு. சிறுபான்மையினர் மட்டுமே இந்த அரசுகளால் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று நினைத்துவிடாதீர்கள். அனைத்து மக்களுமே புறக்கணிக்கப்படுகிறார்கள்.

 

மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்றி இருக்கிறார்கள். நாட்டின் முதுகெலும்பாக விளங்கக் கூடிய விவசாயிகள் நலனுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள சட்டங்கள் அவை. மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக மழையில் கடும் குளிரில் தலைநகர் டெல்லியில் ஒரு மாதகாலமாகப் போராடி வருகிறார்களே விவசாயிகள். அவர்கள் சிறுபான்மையினர் மட்டுமா? அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும்தானே அங்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஜி.எஸ்.டி.யால் ஏறிய அநியாய விலையால் பாதிக்கப்பட்டது அனைத்து இந்திய மக்களும்தானே. பெட்ரோல், டீசல் விலையால் பாதிக்கப்பட்டது அனைத்து இந்திய மக்களும்தானே. சிலிண்டர் விலையால் பாதிக்கப்பட்டது அனைத்து இந்திய மக்கள்தானே. நீட் தேர்வு கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட மாணவச் செல்வங்கள் சிறுபான்மையினரா? அனைத்து இனத்தையும் சேர்ந்தவர்கள்தானே. ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலை தருவோம் என்று சொன்னதால் ஏமாந்தது அனைத்து மக்களும்தானே. கருப்புப் பணத்தை மீட்டு வந்து இந்தியர்கள் அனைவருக்கும் 15 லட்சம் ரூபாய் தருவதாகத்தானே பா.ஜ.க. சொன்னது. இப்படி பா.ஜ.க.வால் ஏமாற்றவர்கள் சிறுபான்மையினர் மட்டுமல்ல, பெரும்பான்மையினரும்தான். அனைத்து இனத்தவர்களும், மொழியினரும், மதத்தவரும்தான்.

 

எனவே பாஜக அரசாக இருந்தாலும், அ.தி.மு.க. அரசாக இருந்தாலும் அவர்கள் அனைத்து மக்களுக்கும் எதிரானவர்கள். இந்தக் கூட்டணியை நிராகரிக்க வேண்டியது அனைவரது கடமையும் ஆகும். இவை அனைத்துக்கும் மேலாக மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்து விவசாயிகளிடம் இருக்கும் நிலங்களைப் பறித்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒப்படைக்கத் துடிக்கிறது மத்திய அரசு. விவசாயிகள் இந்த அரசாங்கத்திடம் எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்றுதான். நாங்கள் விளைவிக்கும் பொருளுக்கு ஆதார விலை வேண்டும் என்று விவசாயிகள் கேட்கிறார்கள். தர மறுக்கிறது பா.ஜ.க. அரசு. அப்படிக் கொடுத்தால், கார்ப்பரேட் நிறுவனங்கள் ஏற்கமாட்டார்கள் என்று பிரதமர் மோடி நினைக்கிறார். அவரது நோக்கம் கார்ப்பரேட்டுகளுக்கு பாதகம் இல்லாமல் ஆட்சி நடத்துவது. ஆனால் விவசாயிகள் கடந்த ஒருமாத காலமாக மழையில், கடும் குளிரில் துடித்தபடி போராடி வருகிறார்கள். இதுவரை 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாண்டு போயிருக்கிறார்கள். இது பிரிட்டிஷ் ஆட்சிக்காலக் கொடுமையைவிடக் கொடூரமானது. இன்னொரு பக்கம் விவசாயிகள் தற்கொலை செய்து மாண்டு வருகிறார்கள். நேற்றைய தினம் மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலைக் குறிப்பை எழுதி வைத்துள்ளார். “நான் மோடி ஆதரவாளர். மோடியின் திட்டங்கள் காகிதத்தில்தான் உள்ளன. எனது உறுப்புகளை விற்று மின் கட்டண பாக்கியைக் கட்டி விடுங்கள். எனது உடலை சௌகான் சிங் அரசாங்கத்திடம் கொடுத்து விடுங்கள்.” என்று அவர் எழுதி வைத்துள்ளார்.

 

அவர் பெயர் முனேந்திர சிங் ராஜ்புத். கரோனா ஊரடங்கு காரணமாக வருமானத்தை இழந்த விவசாயி அவர். ஊரடங்கு காரணமாக அவரது மாவு மில்லும் ஓடவில்லை. இதனால் மின் கட்டணம் ரூ 86,000 ஐக் கட்ட இயலவில்லை. பா.ஜ.க. அரசாங்கமோ அவருக்கு அவகாசம் தர மறுத்தது. அவரது மில், இரு சக்கர வாகனம், 10 குதிரை சக்தி (ஹார்ஸ் பவர்) கொண்ட அவரது மோட்டார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மின்சாரப் பணியாளர்கள் அவரை நடுத் தெருவில் வைத்து அவமானப்படுத்தினர். இதைத் தாங்கிக்கொள்ள முடியாத ராஜ்புத், தற்கொலை செய்து கொண்டார். இப்படி, விவசாயிகளுக்கு மத்திய அரசும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருக்கும் அ.தி.மு.க. அரசும் இன்றைக்கு பல கொடுமைகளை செய்துகொண்டிருக்கின்றன.

 

பல்லாயிரம் கோடிகளில் நாடாளுமன்றம் கட்டுகிறார்கள். இந்த விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்ய முடியாதா? அந்தக் கட்டடம் இப்போது தேவையா என்று விமர்சனம் வந்துகொண்டிருக்கிறது. இதைத் தட்டிக் கேட்கும் கம்பீரமான தமிழகமாக இது இல்லை. எடப்பாடி பழனிசாமி எதை வேண்டுமானாலும் ஆதரித்து, மத்திய அரசின் அடியொற்றி நடந்துகொண்டிருக்கிறார். அவருக்கு விவசாயி என்று சொல்லிக்கொள்ள வெட்கமாக இல்லையா? எப்பொழுது பார்த்தாலும் ‘விவசாயி விவசாயி’ என்று சொல்லிக்கொண்டு விவசாயிகளை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். விவசாயிகளுக்குப் பச்சைத் துரோகம் செய்துகொண்டிருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. பச்சைத் துண்டு போட்டுக் கொண்டு போஸ் கொடுத்தால் விவசாயி ஆகிவிட முடியுமா? ‘நகத்தில் மண் இருக்கவேண்டும், அவர்தான் உண்மையான விவசாயி’ என்று அண்ணா சொல்வார். ஆனால், விவசாயிகளின் ரத்தக்கறை படிந்த கையோடு அலைந்துகொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதுதான் உண்மை.

 

நீங்கள் எல்லாம் ஒரு முடிவெடுத்துவிட்டு வந்திருக்கிறீர்கள். முடிவெடுத்து விட்டு வந்திருப்பவர்களிடம் அதிகம் சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. மேடையில் இருக்கக்கூடிய எங்களை எல்லாம் விட உங்களுக்குத்தான், இந்த ஆட்சியை மாற்றவேண்டும் என்ற ஆர்வமும், மாறும் என்ற நம்பிக்கையும் அதிகம் இருக்கிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை. நான் இந்தக் கூட்டத்தை மட்டும் வைத்துப் பேசுகிறேன் என்று நினைத்துவிடாதீர்கள். காணொளிக் காட்சி மூலமாக மாவட்டம் தோறும் பல கூட்டங்கள் நடத்தி வருகிறோம். அதில் ஒவ்வொரு கூட்டத்திலும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பதுடன், சமூகவலைதளங்கள் மூலமாகப் பல லட்சம் பேர் பார்க்கின்றனர். அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டது. சென்னையில் மட்டும்தான் நடத்த வேண்டி உள்ளது.

 

அதைத் தொடர்ந்து கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. எல்லா இடங்களுக்கும் செல்ல வாய்ப்பு இல்லை என்றாலும், குறிப்பிட்ட சில இடங்களுக்கு, அதாவது யார் யார் நிச்சயமாகத் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறேனோ அந்த இடங்களுக்கு கட்டாயமாகச் சென்று கொண்டிருக்கிறேன். இங்கே அய்யா காதர் மொய்தீன் அவர்கள் 7 இடங்களில் மட்டும் அவர்களுக்கு வாய்ப்பு இருப்பதாகத் தகவல் வந்தது எனச் சொன்னார் அதைக்கூட விடக்கூடாது. நாம் தயாராக இருப்பதை விட மக்கள் அதற்குத் தயாராக இருக்கிறார்கள் என்பதுதான் இன்றைக்கு இருக்கும் உண்மையான நிலவரம்.

 

அதன்படி நாம் வெற்றி பெற அனைவரும் ஒன்றுபடுவோம், ஒன்றுபடுவோம். அதற்காகத்தான் இதயங்களை இணைப்போம் என்ற தலைப்பில் இந்த நிகழ்ச்சியையும் நடத்தி இருக்கிறார்கள்” என்று பேசினார்.

 

சார்ந்த செய்திகள்