
மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கடந்த 20ஆம் தேதி (20.11.2024) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. ஜார்க்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கு நவம்பர் 13 மற்றும் 20ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இந்த இரு மாநிலங்களில் பதிவான வாக்குகள் இன்று (23.11.2024) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
மகாராஷ்டிராவில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் 145 ஆகும். இந்நிலையில் காலை 11.15 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 220 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 55 இடங்களிலும், மற்றவை 13 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. அதிலும் குறிப்பாக பாஜக 127 இடங்களிலும், சிண்டே தலைமையிலான சிவ்சேனா 56 தொகுதிகளிலும், அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 35 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சி 21 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) 11 தொகுதிகளிலும், சிவசேனா (யூ.பி.டி) 19 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர். இதன் மூலம் மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான ஆளும் மஹாயுதி கூட்டணி ஆட்சியைத் தக்க வைக்கும் நிலையில் உள்ளது. பாஜக முதல்வர் வேட்பாளர்களில் ஒருவரான பட்னவிஸ் நாக்பூர் தென் மேற்கு தொகுதியில் முன்னதாக பின்னடைவைச் சந்தித்த நிலையில் மீண்டும் முன்னிலை வகித்து வருகிறார்.