திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி இன்று (09.02.2025) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “யு.ஜி.சி. வரைவு விதிகளை எதிர்த்து திமுக மாணவரணி சார்பில் டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் என இந்தியா கூட்டணியில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மாநில அரசின் அதிகாரங்களை மத்திய அரசு ஒன்றின் பின் ஒன்றாக எடுத்துக்கொள்வதற்கு மற்ற மாநிலங்கள் கண்டன குரல் எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.
மீனவர்களுக்கு இலங்கை அரசால் கொடுக்கப்படுகிற துயரங்கள் மற்றும் துன்பங்களைப் போக்கத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்குப் பலமுறை கடிதம் எழுதியும் அதற்கு நிரந்த தீர்வு கிடைக்கவில்லை. இதன் காரணமாக இந்தியா கூட்டணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற வளாகத்திற்கு வெளியில் ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள். மூன்றாம் கட்டமாக 72 இடங்களில் திமுக சார்பில் கண்டனக் கூட்டங்கள் நடத்தி மத்திய அரசு தமிழகத்தை எவ்வாறு வஞ்சிக்கிறது என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஆவடியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலும், மாதவரத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலும் இந்த கண்டனக் கூட்டங்கள் நடைபெற்றன.
திமுக சார்பில் எழுப்பப்படுகிற குரல் என்னவென்றால் ஏன் இந்த ஓர வஞ்சனை. எந்த வகையில் தமிழகம் தாழ்ந்துவிட்டது. எல்லாவகையிலும் மத்திய அரசுக்குப் பொருளீட்டித் தருகிற மாநிலமாகத் தமிழகம் உள்ளது. வரிப்பகிர்வில் கூட 6 லட்சத்து 28 ஆயிரம் கோடி மத்திய அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், 56 ஆயிரம் கோடி மட்டுமே தமிழகத்திற்கு மத்திய அரசு திருப்பி அளிக்கிறது. இது 6 இல் ஒரு பங்கு கூட கிடையாது. இது எந்த வகையில் நியாயம்?. ஆனால் அதேநேரத்தில் உத்தரப்பிரதேசம், பீகார், குஜராத் மாநிலங்களுக்குக் கேட்காமலேயே நிதி கொடுக்கிறார்கள். ஏன் இந்த ஓரவஞ்சனை?.
இதனைச் சுட்டிக்காட்டும் விதமாக அறிஞர் அண்ணா 1967 இல் ஆட்சிக்கு வந்தபோது சேலம் இரும்பாலை வேண்டும் என எழுச்சி நாள் கொண்டாடி மத்திய அரசின் கவத்தை ஈர்த்தார். அதனுடைய விளைவு சேலத்தில் இரும்பாலை அமைக்கப்பட்டது. கலைஞர் ஆட்சியில் இருந்த போது மாநில சுயாட்சிக்காக உரிமைக்குரல் எழுப்பினார்” எனப் பேசினார்.