Skip to main content

“அவருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தியது ஏன்?” - காங்கிரசுக்கு குமாரசாமி கேள்வி

Published on 26/05/2023 | Edited on 26/05/2023

 

"Why field a candidate against him?" Kumaraswamy's question to Congress

 

தற்போது செயல்பட்டு வரும் நாடாளுமன்றக் கட்டடம் 96 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களால் 1927 ஆம் வருடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்றக் கட்டடத்தின் கட்டுமானம், பாதுகாப்பு வசதிகள் குறைவு மற்றும்  இட வசதி குறைவு காரணமாக புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கைகள் பல ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த நிலையில் புதிய கட்டடம் கட்டுவதற்கான திட்டத்திற்கு பிரதமர் மோடி கடந்த 2020 டிசம்பர் 10 ஆம் தேதி அடிக்கல் நாட்டினார்.

 

கட்டுமானப் பணிகள் முடிந்த நிலையில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் வருகிற மே 28-ம் தேதி சவார்க்கர் பிறந்த நாளன்று பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட உள்ளது. மேலும் நாடாளுமன்றக் கட்டட திறப்பு விழாவுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், "புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை குடியரசுத் தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும். பிரதமர் அல்ல" எனப் பதிவிட்டிருந்தார். நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பதற்கு பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் சபாநாயகரின் இருக்கை அருகில் செங்கோல் ஒன்று நிறுவப்பட உள்ளது.

 

தொடர்ந்து திமுக, விசிக, மதிமுக உட்பட 19 எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றம் திறப்பு விழாவினை புறக்கணிப்பதாக கூட்டாக அறிவித்துள்ளன. அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், "நாட்டின் முதல் குடிமகனாக பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தேர்ந்தெடுக்கப்பட்டதன் நோக்கத்தையே மோடி அரசு சீர்குலைத்துவிட்டது; குடியரசுத் தலைவர் ஒப்புதலின்றி நாடாளுமன்றமே செயல்பட முடியாது என்ற நிலை உள்ளபோது, அவர் இல்லாமல் புதிய நாடாளுமன்றத்தை திறப்பது அரசியலமைப்பை மீறும் செயல்" என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

 

தொடர்ந்து பிரதமர் மோடி நாடாளுமன்றக் கட்டடத்தைத் திறந்து வைப்பதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை ஜனாதிபதி திறந்து வைக்க ஆணையிடக் கோரியும்  புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை திறக்க ஜனாதிபதியை அழைக்காததின் மூலம் அரசியல் சட்டத்தை மக்களவைச் செயலகம் மீறி விட்டதாகவும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் ஜனதா தள கட்சியின் தலைவரும் முன்னாள் கர்நாடக முதலமைச்சருமான குமாரசாமி, “இப்போது காங்கிரஸ் கட்சியினர் இந்திய ஜனாதிபதியின் மேல் மிகுந்த மரியாதையையும் பாசத்தையும் காட்டுகிறார்கள். பின் ஏன் ஜனாதிபதி தேர்தலின் போது அவருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தினார்கள். ஆதிவாசிகளை பாஜகவினர் இழிவு படுத்துகிறார்கள் என காங்கிரஸ் கட்சியினர் சொல்கிறார்கள். காங்கிரஸ் கட்சியின் இத்தகைய செயல்கள் அனைத்தும் மக்களின் கவனத்தை திசை திருப்பவும் சமூகத்தில் ஒரு பிரிவினரின் வாக்குகளைப் பெற மட்டுமே” எனக் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்