நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்றது. இதில் பாஜக மட்டும் 300க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி தனி பெரும்பாண்மையுடன் ஆட்சியை பிடித்தது. தமிழகத்தில் அதிமுக, பாஜக கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. இதனால் பாஜக தலைமை தமிழக பாஜக நிர்வாகிகள் மீது கடும் அதிருப்தியில் இருந்தது. இதனால் இனி வரும் தேர்தலில் பாஜகவை தமிழகத்தில் வலுப்படுத்த உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட வேண்டும் என்று தமிழக நிர்வாகிகளுக்கு பாஜக தலைமை உத்தரவு போட்டதாக சொல்கின்றனர்.
மேலும் தமிழகத்தில் இருக்கும் சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களையும் பாஜகவில் இழுக்க முயற்சி எடுத்து வருவதாகவும் கூறுகின்றனர். இந்த நிலையில் அதிமுக சார்பாக மாநிலங்களவை உறுப்பினராக இருந்த மைத்ரேயன் பதவி காலம் முடிந்த பின்பு, செய்தியாளர்களை சந்தித்து அதிமுக தலைமை மீது இருக்கும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் ஜெயக்குமார் பேசியது அதிமுகவில் நிலவும் உட்கட்சி பூசலை வெளிப்படையாகவே தெரியப்படுத்தியது. இதனையடுத்து மைத்ரேயன் அதிமுகவில் இருந்து விலகி திமுக அல்லது பாஜகவில் இணையப் போவதாகவும் செய்திகள் பரவியது.
ஒரு வேளை மைத்ரேயன் பாஜகவில் இணைந்தால், மைத்ரேயனுக்கும், பாஜக தலைமைக்கும் இடையே நல்ல நட்புறவு இருக்கும் காரணத்தால் அவருக்கு தமிழக பாஜகவில் புதிய பொறுப்புகள் வழங்க வாய்ப்பு உள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இதுவரைக்கும் எந்த ஒரு அதிகாரபூர்வ தகவலும் மைத்ரேயன் தெரிவிக்கவில்லை. செய்தியாளர்களின் சந்திப்பின் போது அதிமுக தலைமை மீது அதிருப்தியை மட்டும் வெளிப்படுத்தினார். மேலும் மாற்று கட்சியில் இணைவாரா இல்லையா என்று வேலூர் தேர்தலுக்கு பின்பு தெரியும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.