சென்னை மாநகராட்சியில் ஆற்றுமணலுக்கு பதில் எம்.சாண்ட்டைப் பயன்படுத்திய வகையில் 1000 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக மு.க.ஸ்டாலின் வைத்த குற்றச்சாட்டு, தற்போது அதிமுக அமைச்சர் தரப்பை நடுங்க வைத்திருப்பதாக கூறுகின்றனர். இந்த முறைகேடுகள் தொடர்பான அத்தனை ஆவணத்தையும் தி.மு.க. சேகரித்து வைத்திருப்பதாக கூறுகின்றனர். உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி தரப்பு, இந்த சிக்கலில் இருந்து எப்படி தப்பிக்கலாம் என்று தீவிர டிஸ்கஷனில் இருப்பதாக சொல்லப்படுகிறது. தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அமைச்சர் தரப்பு, சென்னையில் மாநகராட்சி கமிஷனர் பிரகாஷை கைகாட்டி விட்டு நழுவலாம் என்ற டாக் அடிபட்டு வருகிறது.
அதேபோல் அறப்போர் இயக்கம் சென்னை உள்ளாட்சித் துறை முறைகேடுகள் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், லஞ்ச ஒழிப்புத்துறையின் ரிப்போர்ட்டை நீதிமன்றம் கேட்டிருந்தது. இதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.பொன்னி, அறப்போர் இயக்கத்தின் குற்றச்சாட்டு ஆவணங்களை வழிமொழிவது போலவே அறிக்கையைத் தயார் செய்துவிட்டார் என்கின்றனர். இதனால் இந்த விவகாரம் நாளை சி.பி.ஐ. விசாரணை வரைக்கும் போகலாம் என்று நினைத்த அமைச்சர் வேலுமணி, துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, ஈஷா மைய அதிபர் ஜக்கி வாசுதேவ் ஆகியோரிடம், டெல்லி திசையில் இருந்து சிக்கல் வராமல் பார்த்து கொள்ளுங்கள் என்று நட்பின் அடிப்படையில் கோரிக்கை வைத்துவிட்டு, நகத்தைக் கடித்துக்கொண்டு டென்ஷனில் இருப்பதாக சொல்லப்படுகிறது.