தமிழகத்தில் 66 இடங்களில் துளையிட்டு நிலக்கரி எடுக்க மத்திய அரசு வெளியிட்டு இருக்கும் அறிவிப்பாணைக்கு எதிராக விவசாயிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
தமிழக அரசு சார்பில், 'தற்போது நிலக்கரி சுரங்கம் அமைக்கும் நிலத்தை லீசுக்கு எடுப்பதற்கான அனுமதியை மாநில அரசு கொடுத்தால் மட்டுமே உள்ளே சென்று சுரங்கம் தோண்டும் பணிகளைச் செய்ய முடியும். எனவே இது ஆரம்பக்கட்ட ஆய்வு. ஆய்வின் முடிவில் அங்கு உண்மையிலேயே கனிமங்கள் இருப்பது தெரிய வந்தால் மாநில அரசிடம் விண்ணப்பம் செய்வார்கள். மாநில அரசு அனுமதி கொடுத்தால் மட்டுமே அங்கு சுரங்கம் அமைக்க முடியும். இது வீராணம் நிலக்கரி திட்டத்திற்கும் பொருந்தும். அந்த வகையில்தான் வீராணம் நிலக்கரி திட்டத்திற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எனவே விவசாயிகள் யாரும் கவலை அடைய வேண்டாம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “விவசாயிகளுக்கு ஆதரவாக மட்டுமல்ல போராட்டத்திலே நான் தான் முதலாவதாக நிற்பேன். என் நிலத்தை இழந்தால் என் வளத்தை இழப்பேன். என் வளத்தை இழந்தால் என் இனத்தை இழப்பேன். இந்த அரசுகள் தீர்ந்து போகின்ற வளங்கள் மீதே கை வைக்கின்றன. நிலக்கரி, மீத்தேன், ஈத்தேன் இவையெல்லாம் குறிப்பிட்ட காலம்தான் நீங்கள் எடுக்க முடியும். ஆனால் தீராத ஆற்றல்கள் மூலம் குறிப்பாக சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் தயாரிப்பதற்கும், கடல் அலை, காற்றாலை போன்ற தீராத ஆற்றல் மூலம் மின்சாரத்தை எடுத்துக் கொள்ளலாம்.
நிலக்கரியை இன்னும் எவ்வளவு காலத்திற்கு எடுப்பீங்க. ஒரு அடிப்படை அறிவற்ற கூட்டத்திடம் நாட்டை கொடுத்துவிட்டு மீத்தேன், ஈத்தேன் என மாறி மாறி தோண்டி தோண்டி பூமியை கொலை செய்கிறார்கள். எந்த மாநிலத்தில் இப்படி எல்லாம் நடக்கிறது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க சொல்கிறார்கள். அப்புறம் அதிலேயே நிலக்கரி எடுக்க வேண்டும் என்கிறார்கள்.” என்றார்.