சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ரவி, "தமிழகத்தில் ஒரு வித்தியாசமான அரசியல் சூழல் உள்ளது. எல்லாவற்றுக்கும் நாங்கள் திராவிடர்கள் என்று சொல்கிறார்கள். இந்தியா முழுவதும் ஒரு செயல்திட்டம் இருந்தால், அதனை வேண்டாம் என்கிறது தமிழ்நாடு. முதலில் தமிழ்நாடு என்று சொல்வதை விடத் தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். ஆங்கிலேயர்கள் காலத்தில்தான் மாநிலங்கள் உருவாக்கப்பட்டது. பாரதத்தின் பகுதியே தமிழகம். தமிழகம் பாரதத்தின் அடையாளம்" என்று தெரிவித்திருந்தார்.
ஆளுநர் ரவியின் இந்தக் கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப் பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது. அதுமட்டுமல்லாமல் இணையவாசிகள் பலரும் ‘தமிழ்நாடு’ என்று குறிப்பிட்டு ஆளுநர் ரவியின் கருத்திற்கு எதிராக கடும் விமர்சனங்களை வைத்து வருகின்றனர். இதனால் தமிழ்நாடு என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அவரது டிவிட்டர் பக்கத்தில், 'திராவிட நாடு கோரிக்கை நீர்த்துப் போகவில்லை என்றும் சொந்த நாடு கேட்க எங்களை வற்புறுத்தாதீர்கள் என்றும் பிரிவினைவாத கருத்துக்களை எடுத்துரைக்கும் திமுகவினருக்கு ஆளுநரை விமர்சிக்க என்ன தகுதி இருக்கிறது? இன்றளவும் தனித்தமிழ்நாடு என்ற கோரிக்கையை முன்வைத்து முழங்கும் பிரிவினைவாத விஷ செடிகளை வளர்த்து விட்டதில் திமுகவின் பங்கு அனைவரும் அறிவர். வழக்கம்போல் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், ஆட்சியில் உள்ள குளறுபடிகளை மறைப்பதற்காக திசைதிருப்பும் முயற்சியாகவே திமுகவினரின் செயல்பாடுகள் உள்ளது' என கருத்து தெரிவித்துள்ளார்.
திராவிட நாடு கோரிக்கை நீர்த்துப் போகவில்லை என்றும் சொந்த நாடு கேட்க எங்களை வற்புறுத்தாதீர்கள் என்றும் பிரிவினைவாத கருத்துக்களை எடுத்துரைக்கும் @arivalayam கட்சியினருக்கு @rajbhavan_tn அவர்களை விமர்சிக்க என்ன தகுதி இருக்கிறது? (1/5)
— K.Annamalai (@annamalai_k) January 7, 2023