குஜராத்தில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 182 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்ட நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. அதேபோல் இமாச்சலப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியும் துவங்கி நடைபெற்று வருகிறது.
குஜராத்தில் பாஜக ஆட்சி அமைப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று மாலை 6 மணிக்கு பிரதமர் மோடி பாஜகவினர் முன்னிலையில் உரை நிகழ்த்த இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பாஜகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குஜராத் பாஜக முதல்வர் வேட்பாளர் பூபேந்திர படேல், தான் போட்டியிட்ட கட்லோடியா தொகுதியில் 58,529 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதேபோல் இமாச்சலப்பிரதேசத்தில் சிராஜ் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஜெயராம் தாகூர் 33,256 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
தற்போது வரை குஜராத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 156 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 17 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி 5 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா, குஜராத்தில் பாஜக வென்றதன் மூலம் 2024 தேர்தலை பற்றிய விவாதமே தேவை இல்லை எனக் கூறியுள்ளார்.
“குஜராத்தில் கடந்த தேர்தலில் 99 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக தற்போது 150 தொகுதிகளுக்கும் மேலாக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 15 இடங்களுக்கும் கீழே வந்துள்ளது. இமாச்சலில் 1982ல் இருந்தே ஆட்சி மாறி மாறி வருகிறது. இனி 2024 தேர்தலை பற்றி நமக்கு விவாதங்களே தேவையில்லை.
ஆம் ஆத்மி டெல்லியில் வென்றது எரி நட்சத்திரம் போன்ற நிகழ்வு. பஞ்சாப், மத்தியப் பிரதேசம், டெல்லி போன்ற இடங்களில் சில தொகுதிகளில் வென்ற உடன் இனிமேல் காங்கிரஸ் மற்றும் பாஜகவிற்கு இடமில்லை என பல ஊடகங்கள் எழுதின. மாயாவதி தான் அடுத்த பிரதமர் என்றும் ஊடகங்கள் எழுதின. மாயாவதியின் சொந்த மாநிலத்திலேயே ஒரு எம்.எல்.ஏ அவர்கள் கட்சியில் இல்லை. இது போல் பல உதாரணங்கள் உள்ளன. ஆக இது ஒரு எரி நட்சத்திரம்”