அண்ணாவையும் கலைஞரையும் இணைக்க பாலமாக இருந்தது இஸ்லாமிய சமுதாயம் தான் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் 75-வது ஆண்டு பவள விழா ஆண்டை கொண்டாடும் வகையில் அக்கட்சியின் 'அகில இந்திய மாநாடு 2023' சென்னையில் நடைபெறுகிறது. இந்நிகழ்வில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். டெல்லியில் நடைபெற இருக்கக்கூடிய மாநாட்டுக்கு வர வேண்டும் என்று இந்த மாநாட்டில் அழைப்பு விடுத்துள்ளார்கள். உறுதியுடன் சொல்கிறேன் மாநாட்டிற்கு வருவேன். திமுகவிற்கும் இஸ்லாமிய சமூகத்திற்கும் இடையே ஏற்பட்ட தொடர்பு இன்று நேற்று ஏற்பட்டதல்ல. கலைஞரை உருவாக்கியதில் பெரியார் நடத்திய ‘குடியரசு’ இதழைப் போலவே ‘தாருள் இஸ்லாம்’ என்ற இதழுக்கும் பங்குண்டு. மிக சிறு வயதில் தாருள் இஸ்லாம் புத்தகத்தை படித்து தான் விழிப்புணர்வு பெற்றதாக கலைஞர் எழுதியுள்ளார். அண்ணாவையும் கலைஞரையும் இணைக்க பாலமாக இருந்ததே இஸ்லாமிய சமுதாயம் தான்.
திருவாரூர் மிலாடி நபி விழாவில் பேச வந்த அண்ணா, இந்த ஊரில் கருணாநிதி என்றால் யார் அவரை அழைத்து வாருங்கள் என சொல்லியுள்ளார். சிறு வயதாக இருந்த கலைஞரை பார்த்து கட்டுரை எழுதுவதில் கவனம் செலுத்தாமல் படி என அண்ணா சொல்லியுள்ளார். ஆனால், அதன் பிறகு தான் எனக்கு அரசியல் ஆர்வம் வந்தது என கலைஞர் எழுதியுள்ளார். திமுக ஆட்சி சமூக விழுமியங்களை கொண்டதாக செயல்படுகிறது. இதே சமூக விழுமியங்கள் இந்தியா முழுவதும் பரவ வேண்டும். ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு, ஒரே உணர்வு, ஒரே தேர்தல், ஒரே தேர்வு இப்படி ஒற்றைத்தன்மை கொண்டதாக இந்தியாவை மாற்ற நினைப்பவர்கள் சமூக நீதிக்கு எதிரானவர்கள். சகோதரத்துவத்துக்கு துரோகமானவர்கள். சமதர்மத்தை ஏற்காமல் இருக்கக் கூடியவர்கள்.” எனக் கூறினார்.