ரஷ்யா உக்ரைன் போர் விவகாரத்தில் அங்குள்ள தமிழ் மாணவர்களை மீட்க வேண்டும் என பல்வேறு நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொண்டு வரும் நிலையில் தமிழக அரசின் இந்த நடவடிக்கைகள் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பல்வேறு விமர்சனங்களை வைத்துள்ளார். அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''உங்களுக்கு தெரியாத வேலையைச் செய்யாதீர்கள். எக்ஸ்பர்ட்ஸ் கிட்ட அந்த வேலையை விட்டுவிடுங்கள். அவர்கள் இந்த வேலையைத் தனித்தன்மையாக செய்து மாணவர்களை இங்கு கொண்டுவந்து விடுவார்கள். எதற்கெடுத்தாலும் நான்தான் நான்தான் என சொல்கிறீர்கள். அப்படி என்ன அரசியல். தமிழ்நாட்டில் இவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறது. குழந்தைகளுடைய பெற்றோரைப் பார்க்க முடியவில்லை. உக்ரைனில் கடந்த எட்டு நாட்களாக இந்த போரை பார்த்துக் கொண்டிருக்கின்றோம். உலகத்தில் இருக்கக்கூடிய எந்த நாடும் உள்ளே சென்று குழந்தைச் செல்வங்களை மீட்க முடியாத நிலைமை இருக்கிறது. சிறிய நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ் என யாராலும் முடியவில்லை. அமெரிக்கா போன்ற நாடுகள் அவர்களுடைய பிரஜைகளை அங்கிருந்து மீட்க முடியவில்லை.
நேற்றுவரை 6,200 குழந்தைகள் இந்தியாவிற்கு வந்துள்ளார்கள். இன்றும் நாளையும் சேர்த்து 7,400 பேர் வரப்போகிறார்கள். ஆக மொத்தம் 14 ஆயிரம் குழந்தைகள் இதுவரை, இன்று நாளைக்குள் கங்கா ஆபரேஷன்கள் மூலம் தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் வரப்போகிறார்கள். இந்த நேரத்தில் தமிழக அரசு 3 எம்பிக்கள், எம்எல்ஏக்கள், ஐஏஎஸ் அதிகாரிகளை அனுப்புகிறோம் என்று சொல்கிறார்கள். அவர்கள் அங்கே போய் என்ன செய்யப் போகிறார்கள். மத்திய அரசு பணியை எப்படி இவர்களால் செய்ய முடியும். ரஷ்யா, உக்ரைன் உள்ளிட்ட சுற்றியுள்ள ஐந்து நாடுகளிடமும் மத்திய அரசு பேசி நமக்காக விமானங்களை இயக்கிக் கொண்டிருக்கிறது. அப்படி இருக்கும் பொழுது மாநில அரசு அங்குச் சென்று என்ன செய்யும் என்பது என்னுடைய கேள்வி. இது அவர்களுடைய பணியே கிடையாது. பெற்றோர்களைச் சந்தித்துப் பேச வேண்டிய பணிகள் இருக்கும் போது இதை செய்வது முழுமையான அரசியல் ஆதாயத்திற்கு மட்டும்தான். மத்திய அரசின் பணியை உலக அளவில் இந்திய அளவிலும் தமிழகத்திலும் அனைத்து மக்களும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். நாளைக்கு அமெரிக்காவில் தமிழர்களுக்கு பிரச்சினை ஏற்பட்டால் இங்கிருந்து குழுவை அனுப்புவீர்களா? நாளைக்கு பிலிப்பைன்சில் புயலில் ஒரு தமிழனுக்கு பிரச்சினை ஏற்பட்டால் இங்கிருந்து குழுவை அனுப்புவீர்களா? ஜப்பானில் ஒரு தமிழனுக்கு ஏதாவது ஆகிவிட்டால் குழுவை அனுப்புவீர்களா? இதற்குத்தான் அரசியலமைப்புச் சட்டத்தில் யார் எந்த வேலையும் செய்ய வேண்டும் என்று மிகத் தெளிவாக இருக்கிறது.
இதெல்லாம் தெரியாமல் ஏன் தமிழக முதல்வர் இந்திய அளவில் நகைச்சுவைக்கு ஆளாகும் மனிதராக மாறி கொண்டிருக்கிறார். தொடர்ச்சியாக, இது முதல் முறை கிடையாது இது நான்காவது ஐந்தாவது முறை இந்த மாதத்தில் மட்டும். உங்களுக்குத் தெரியாத வேலையைச் செய்யாதீர்கள்'' என்றார்.