மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் ஜூலை மாதம் 8 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் ஆர்வத்துடன் மனுத் தாக்கல் செய்து வந்தனர். மேலும் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது.
வேட்புமனு தாக்கலின் போது பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இதுவரை சுமார் 5 பேர் வரை உயிரிழந்து இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்தை தொடர்ந்து கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சிவஞானம், 48 மணி நேரத்தில் துணை ராணுவப் படையை அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுமாறு உத்தரவிட்டார். மோதல் சம்பவம் நடந்த பகுதிகளில் மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இந்நிலையில் மோதல் சம்பவம் குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று பேசுகையில், “உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் அமைதியாக நடந்து கொண்டு இருக்கிறது. பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியுடன் இணைந்து செயல்பட்டால் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவை காங்கிரஸ் கட்சி எதிர்பார்க்கக் கூடாது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிரான போராட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது. நாங்களும் பாஜகவை எதிர்த்துப் போராட விரும்புவதால் நாங்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிப்போம். ஆனால் பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியுடன் மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் இணைந்து செயல்பட்டு வந்தால் நாங்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிப்போம் என்று காங்கிரஸ் கட்சி எதிர்பார்க்கக் கூடாது" எனத் தெரிவித்துள்ளார்.