திமுக தலைமை கழகத்தின் அறிவுறுத்தலின்படி இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “‘அதிமுகவை நிராகரிப்போம்’ என்ற இந்த முன்னெடுப்பை தமிழகம் முழுதும் திமுகவினர் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்தில் மட்டும் 124 இடங்களில் கிராம சபைக் கூட்டம் நடத்தியுள்ளோம்.
கிராம சபைக் கூட்டங்களில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதித்துள்ளோம். பெண்களிடம் இருந்து பெறப்பட்ட ஒவ்வொரு மனுவும் முக்கியமானது. எனவே கிராமம் வாரியாக பிரச்சனைகளை சேகரித்து அதனை ஆவணப்படுத்தி தலைமையிடம் கொடுத்து, அதனை சரி செய்ய திமுக தயாராகி வருகிறது மற்றும் 1 கோடி பேர் ‘அதிமுகவை நிராகரிப்போம்’ என்று கையெழுத்து போட்டுள்ளனர்.
பெரும்பாலான பகுதிகளில் ரேஷன் பொருட்கள் வழங்குவதில் ஏற்படும் பிரச்சனை, ஒரு சில பொருட்களைக் கட்டாயபடுத்தி வாங்க வைப்பது. பல இடங்களில் சுடுகாட்டிற்கு இடம் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது அதனை சரி செய்ய திட்டமிட்டுள்ளோம்.
திருவெறும்பூர் உள்ளிட்ட பல இடங்களை நேரில் ஆய்வு செய்து, பயிர் பாதிக்கப்பட்ட இடங்களைக் கணக்கிட்டு மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி உள்ளோம். பாதிக்கபட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க முயற்சி செய்துள்ளோம். மு.க.ஸ்டாலின் எங்கு கை காட்டுகிறாரோ அங்கு நான் போட்டியிடுவேன்.” என்று கூறினார்.