இந்தியாவில் கூட்டணிக் கட்சிகளாக இருக்கும் அதிமுகவும், பாஜகவும் தமிழகத்தில் மோதிக்கொள்கின்றன. சமீப காலமாக அதிமுக - தமிழக பாஜக இடையே வார்த்தை போர் நிலவி வருகிறது. தமிழக தலைவர் அண்ணாமலை, அதிமுக முன்னாள் தலைவரான ஜெயலலிதா குறித்து பேசியது அக்கட்சி தொண்டர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதிமுக தலைவர்கள் பாஜகமீதும், அண்ணாமலை மீதும் சரமாரியாக விமர்சனங்களை முன்வைத்தனர். பின்னர் இருகட்சித் தலைவர்களையும் அழைத்து டெல்லி தலைமை பேசிய பிறகு வார்த்தை போர் சற்று தணிந்திருந்தது. இது தொடர்பாக அண்ணாமலை மன்னிப்பு கேட்டதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் பேரறிஞர் அண்ணா குறித்தும் அண்ணாமலை பேசியது அதிமுகவினரை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியது. இதையடுத்து அண்ணா குறித்துப் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜு, சி.வி. சண்முகம் போன்றவர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். இது தொடர்பாக மாறி மாறி இரு கட்சி தலைவர்களும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயகுமார், “அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. தற்போது இல்லை; கட்சி முடிவையே நான் சொல்கிறேன். தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் பா.ஜ.க.வுக்குத் தான் பாதிப்பு. தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நோட்டாவை கூட தாண்ட முடியாது. பா.ஜ.க.வுக்கு காலே இல்லை; எப்படி தமிழ்நாட்டில் காலூன்றும்?
எங்களை விமர்சிக்கும் பா.ஜ.க.வை நாங்கள் ஏன் சுமக்க வேண்டும்? கூட்டணி கட்சியை விமர்சித்தால் தேர்தலில் தொண்டர்கள் எப்படி ஒன்றிணைந்து வேலை செய்வார்கள்? கூட்டணி தர்மத்தை மீறி அண்ணாமலை பேசி வருவதை அ.தி.மு.க. தொண்டர்கள் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்; சிங்கக் கூட்டத்தை பார்த்து சிறுநரி அண்ணாமலை ஊளையிடுகிறது; அண்ணாமலையைத் திருத்துங்கள் என்று பா.ஜ.க. மேலிடத்தில் கூறிவிட்டோம்; பா.ஜ.க. தேசிய தலைமை சொல்லியே அண்ணாமலை தனது பேச்சை நிறுத்தாவிட்டால், தாறுமாறாக விமர்சனம் செய்வோம்” என்றார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் அதிமுக பாஜக கூட்டணி முடிவு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''அது உட்கட்சிப்பூசல். அதில் நாம் தலையிடக்கூடாது. ஜாதி இருக்கக் கூடாது, பிறப்பால் எல்லாரும் சமம் என்பதைத்தான் நாங்களும் சொல்லிக் கொண்டிருக்கிறோம். அதனால்தான் சதானத்தை ஒழிக்க வேண்டும் என்று சொல்லி வருகிறோம். அதற்காகத்தான் நாங்கள் குரல் கொடுத்து வருகிறோம்'' என்றார்.