ஆளுநரின் செயல்பாடுகளைப் பார்க்கும் போது உள்நோக்கம் இருக்கிறது என்பது எனக்கு புரிகிறது என அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் நினைவாக மதுரையில் அமைக்கப்பட்டிருக்கும் நூலகத்தை அமைச்சர்கள் எ.வ.வேலு, மூர்த்தி, அன்பில் மகேஷ் ஆகியோர் இன்று பார்வையிட்டனர்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஏறத்தாழ 50 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். 84ல் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தொடர்ந்து உள்ளேன். ஆளுநர் என்பவர் அரசுக்கு உந்துசக்தியாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் பல ஆளுநர்கள் பணியாற்றியதைப் பார்த்துள்ளேன். ஆனால், எந்தத் திட்டத்தை தமிழக அரசு கொண்டு சென்றாலும் அதற்கு தற்போதைய ஆளுநர் முட்டுக்கட்டையாக உள்ளார்.
காலதாமதமாகவே கோப்புகளை பார்ப்பது; அப்படி பார்த்தாலும் ஏதாவது காரணத்தைச் சொல்லி அதைத் திருப்பி அனுப்புவது என்பதெல்லாம் பார்க்கும்போது ஆளுநருக்கு வேறு உள்நோக்கம் இருக்கிறது என்பது எங்களுக்கு புரிகிறது. தமிழ்நாட்டை திராவிட இயக்கங்கள் தான் ஆண்டு கொண்டுள்ளது. பல ஆளுநர்கள் இருந்துள்ளார்கள். முதல்வர் விரைந்து செயல்படுவது போல் ஆளுநரும் விரைந்து செயல்பட்டால் பல திட்டங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு விரைந்து வருவதற்கு வாய்ப்பாக அமையும்.
இதில் மத்திய அரசாங்கத்தை நேரடியாக நான் சொல்ல முடியாது. ஆளுநரை நியமிப்பது மத்திய அரசு தான் என்றாலும் கூட அரசு ஆளுநருக்கு என்ன சொல்கிறது என்பது எங்களுக்கு எப்படி தெரியும். ஆளுநரின் செயல்பாடுகளைப் பார்க்கும் போது உள்நோக்கம் இருக்கிறது என்பது எனக்கு புரிகிறது. இதில் மத்திய அரசை நேரடியாகக் குற்றஞ்சாட்ட வாய்ப்பில்லை” எனக் கூறினார்.