சென்னை மாநகராட்சித் தேர்தலில் மேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்று தி.மு.க. தலைமையிடம் விருப்ப மனுக்கள் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், சென்னை மாநகராட்சியை பட்டியல் இன மக்களுக்கான தொகுதியாக மாற்ற வேண்டும் என்று முதல்வர் எடப்பாடியிடம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கோரிக்கை மனுவை நேரில் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதே போல் உள்ளாட்சித் துணைத் தலைவர் பதவிகளில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்றும் கூறிவருகின்றனர்.
மத்திய அரசால் பாதியாகக் குறைக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட பழங்குடி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைக்கான நிதியை, மாநில அரசு ஈடுகட்ட வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளையும் முதல்வர் எடப்பாடியிடம் வைத்துவிட்டுத்தான் திருமா வந்தார் என்று சொல்லும் சிறுத்தைகள் தரப்பு, நாங்கள் தி.மு.க. கூட்டணியில்தான் தொடர்கிறோம். தேவையில்லாத வீண் வதந்திகளை பரப்புகிறவர்களைப் பற்றி நாங்கள் கவலைப்படமாட்டோம். அதே சமயம், சென்னை இந்தமுறை தனித் தொகுதியாக ஆக வாய்ப்பில்லை என்பதையும், இப்போது வேலூரையும், தூத்துக்குடியையும் தான் தனித்தொகுதியாக்கும் திட்டத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.