
தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை கொடுக்கிறோம் எனக் கூறுவதை விட தமிழ் இளைஞர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நீண்ட காலமாக இந்த அரசுகள் வளர்ச்சி என்ற ஒற்றை வார்த்தையைப் பிடித்துக்கொண்டு தொடர்ச்சியாக இந்த நிலத்தையும் வளத்தையும் நாசமாக்கிக் கொண்டு வருவதை நாம் பார்க்கின்றோம். நிலத்தையும், நீரையும், காற்றையும் நஞ்சாக்குகிற நச்சு ஆலைகளை உருவாக்குகின்றனர். அணு உலை அனல் மின்சாரம் இதற்கெல்லாம் மாற்றே இல்லாததுபோல் கட்டமைக்கிறது. காற்றாலைகள் சூரிய ஒளியில் எல்லாம் எப்படி மின்சாரம் தயாரிக்கிறார்கள். மற்ற நாடுகளில் சூழலியலுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்தாமல் பல வழிகளில் மின்சாரங்களைத் தயாரிக்கின்றனர்.
மற்ற நாடுகளும் மீத்தேன் ஈத்தேன் எடுக்கின்றது. ஆனால் மக்கிய மரக்கழிவுகளில் இருந்துதானே எடுக்கின்றது. அது பூமியை கொடையவில்லையே. பூமியின் இதயத்தை அறுக்கவில்லையே. அனைத்திற்கும் மாற்று இருக்கிறது. ஆனால் அதற்கு நீங்கள் வர மறுக்கிறீர்கள். வளர்ச்சி என்ற பெயரில் சிப்காட் கொண்டு வருகிறோம் என்கிறீர்கள். என்ன வளர்ந்துள்ளது. ரேஷனில் இலவச அரிசி கொடுத்தால்தான் நாங்கள் வாழ முடியும் என்ற நிலையில் உள்ளோம். மோடி சட்டம் போட்டு கையெழுத்து போட்டா மலை சரசரன்னு வளர்ந்துவிடுமா?
தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை என்கிறார்கள். பிற மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு வந்தால் அவர்கள் தமிழ்நாட்டு மக்கள் ஆகிவிடுவார்கள். எனவே தமிழ் இளைஞர்களுக்கு வேலையில் முன்னுரிமை என்று கூற வேண்டும். தமிழ்நாட்டு இளைஞர்கள் என்று வேலை கொடுத்தால் பிற மாநிலத்திலிருந்து இங்கு வந்தவர்கள் தமிழ் இளைஞர்கள் என்று ஆகிவிடுவார்கள். அதற்கு பிறகு அவன் என் ஆள் இல்லை என்று மீண்டும் நான் சண்டை இட வேண்டும்” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.