“யாரைக் காப்பாற்றுவதற்காக 2 லட்சத்து 75 ஆயிரம் குடும்பங்களை ரோட்டில் விட்டுள்ளோம் என்பது தெரிய வேண்டும்” என சசிகலா கேள்வி எழுப்பியுள்ளார்.
சசிகலா சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “எனக்கு இது சொந்த ஊர், அது சொந்த ஊர் என கிடையாது. சாதியிலும் அப்படி நினைத்தது இல்லை. அப்படி நினைத்திருந்தால் கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்தவரை முதல்வராக ஆக்கி இருக்க மாட்டேன். என்னைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவின் தொண்டர்களாகத்தான் பார்த்துள்ளேன். ஜெயலலிதா திடீரென்று ஏழைக்கும் எம்.எல்.ஏ சீட் கொடுப்பார்கள். அதனால் என் வழி தனிவழியாகத்தான் இருக்கும்.
ஆரம்பத்தில் இருந்தே எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்று தான் நான் சொல்லிக்கொண்டு வருகிறேன். அதிமுகவின் உட்கட்சிப் பூசலை திமுக எப்படி பயன்படுத்துகிறது என்பதைத்தான் பார்க்க வேண்டும். அதிமுக ஒன்று சேரக்கூடாது என்பதை திமுக சரியாக கொண்டு செல்கிறார்கள்.
பொருளாதாரக் குற்றப்பிரிவுகளின் வேலை தவறு செய்பவர்களைக் கண்டுபிடிப்பது. இங்கு 2 லட்சத்து 75 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இப்பிரச்சனை பூதாகாரமாக வந்த பின் மக்கள் போராட ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால், அது வெளியில் தெரியவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்காக அதிகாரிகள் சென்று விசாரித்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அந்த நிறுவனங்களின் திறப்பு விழாவில் இப்போதைய ஆளும் கட்சியை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டுள்ளனர். யாரைக் காப்பாற்றுவதற்காக 2 லட்சத்து 75 ஆயிரம் குடும்பங்களை ரோட்டில் விட்டுள்ளோம் என்பது தெரிய வேண்டும்” எனக் கூறினார்.