இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேசுகையில், ''தமிழக ஆளுநர் அப்பட்டமாக அரசியல் செய்கிறார். முதன் முதலாக தமிழக காங்கிரஸில் நாங்கள் தான் சொன்னோம் இந்த ஆளுநர் உள்நோக்கத்தோடு வருகிறார் என்று சொன்னோம். காரணம் அவர் உளவுத்துறை பின்புலம் கொண்டவர். மாநில அரசை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக வந்திருக்கிறார். பல உதாரணங்கள் சொல்லலாம். ஆனால் அதில் ஒரு உதாரணம், கோவையில் சிலிண்டர் வெடிப்பு ஏற்பட்டது, உடனே ஆளுநர் வெளியுலகத்தற்கு 'இந்த விசாரணை நான்கு நாட்கள் தள்ளி வைக்கப்பட்டு விட்டது. இந்த நான்கு நாட்களில் முக்கியமான ஆவணங்கள் அழிக்கப்பட்டு விட்டன' என்று சொல்கிறார். விசாரணையை தள்ளி வைத்தது தமிழக அரசு என்று சொல்கிறாரா? அல்லது தமிழக காவல்துறையை சொல்கிறாரா? முக்கியமான ஆவணங்களை யார் அழிக்க முடியும்? அரசாங்கம் அழிக்குமா? காவல்துறை அழிக்குமா? இது ஒரு தேசவிரோத குற்றச்சாட்டு. ஒரு ஆளுநர் அதைச் சொல்லக்கூடாது.
கோவை சிலிண்டர் வெடிப்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. குற்றவாளிகள் தேடி கண்டுபிடிக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டார்கள். விசாரணை நடைபெற்றது. ஒரு நிமிட நேரத்தைக் கூட தமிழக காவல்துறை விரயம் செய்யவில்லை. ஆளுநருக்கு சில உரிமைகள் உண்டு. அவர் முதலமைச்சரை கூப்பிடலாம், தலைமைச் செயலாளரை கூப்பிடலாம், காவல்துறை உயர் அதிகாரிகளை கூப்பிடலாம், கூப்பிட்டு தன்னுடைய கருத்துக்களை சொல்லலாம். அது ஆட்சி முறை. அது அரசியலமைப்புச் சட்டத்தை அவர் மதிக்கிறார் என்பதற்கு பொருள். ஆனால் அதற்கு மாறாக பொதுவெளியில் ஆர்.எஸ்.எஸ், பாஜக செய்தி தொடர்பாளர் போன்று சொல்வது என்ன நியாயம். தவறு அது. எந்த உறுதிமொழியை எடுத்துக்கொண்டு இங்கு ஆளுநராக வந்திருக்கிறாரோ அதற்கு நேர் எதிரான செயல்பாடுகளை செய்கிறார். இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். அவர் அதை மாற்றிக்கொள்ள வேண்டும். தமிழகம் ஜனநாயகத்தின் தொட்டில். இதை போன்ற அத்துமீறல்களை ஒருபோதும் தமிழகம் ஏற்றுக்கொள்ளாது'' என்றார்.