Skip to main content

“ஒத்தழைப்பு அளிக்க வேண்டும், இல்லையெனில் தமிழ்நாடு பாலைவனமாகிவிடும்” - தொல். திருமாவளவன்!

Published on 12/07/2021 | Edited on 12/07/2021

 

"We have to cooperate otherwise Tamil Nadu will become a desert" - Prof. Thirumavalavan

 

காட்டுமன்னார்கோயிலில் சட்டமன்ற அலுவலக திறப்பு விழா ஜூலை 11ஆம் தேதி நடைபெற்றது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு அலுவலகத்தைத் திறந்துவைத்தனர். இதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன் உள்ளிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், திமுகவினர், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் பிரகாஷ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் கலந்துகொண்டனர்.

 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், “காவேரியில் மேகதாது அணைகட்ட கர்நாடக அரசு முயற்சி செய்வது அதிர்ச்சியை அளிக்கிறது. இதற்கு மத்திய அரசு எந்த விதத்திலும் துணை போகக்கூடாது, இதுதொடர்பாக இன்று (12.07.2021) தமிழக முதல்வர் தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து தமிழக அரசுக்கு முழுமையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இல்லையென்றால் எதிர்காலத்தில் தமிழ்நாடு பாலைவனமாகிவிடும். ஆகவே தமிழகத்தின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு முதல்வர் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் முழு ஒத்துழைப்பு அளிக்கும். பஞ்சமி நிலத்தைக் கண்டறிவதற்கும், பின்னடைவு காலியிடங்களை உடனே நிரப்புவதற்கும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை முறைப்படி நடைமுறைப்படுத்துவதற்கும், தமிழக முதல்வர் அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும் அறிவுரை வழங்கியிருக்கிறார். உரிய வழிகாட்டுதலைத் தந்திருக்கிறார். அது வரவேற்கதக்கது.

 

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலைக் கருத்தில்கொண்டு பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ் தமிழர்களையும் தமிழ்நாட்டையும் கூறுபோடும் முயற்சிகளில் ஈடுபடுவதாகவும், தமிழகத்தைப் பிரித்து தனி மாநிலமாக்க திட்டமிட்டு வதந்தி பரப்பபடுகிறது. மேற்கு மாவட்டங்களை ஒருங்கிணைத்து தனி மாநிலமாக அறிவிக்கப்போவதாக சங்பரிவார் அமைப்புகளைச் சார்ந்த பிற்போக்குவாத சக்திகள் வதந்தி பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். இது மொழி மற்றும் இன அடிப்படையில் தமிழர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டுவிடக் கூடாது என்பதற்கான ஒரு ஆபத்தான முயற்சி. மேற்கு மாவட்ட மக்களை ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தில் இருந்து பிரிக்கும் முயற்சியை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும.

 

தமிழக பாஜக தலைவர் பதவியைப் பறித்து முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி அளித்திருப்பது, பதவி உயர்வு என்ற தோற்றத்தைப் பெறலாம். ஆனால் உண்மையில் தமிழ்நாட்டின் பாஜக தலைவர் என்பது வலிமை வாய்ந்த பதவி, வலிமை மற்றும் பெருமையை மட்டுமே தரும். தேர்தல் முடிந்ததும் அவரை தூக்கி வீசிவிட்டார்கள். அவரும் அவர் சார்ந்த சமூகமும் வருத்தப்படக்கூடாது என்பதற்காக துணை அமைச்சர் பதவி அளித்திருப்பதாகவும், இது அவருக்கு இழைக்கப்பட்டுள்ள துரோகம், அவமதிப்பு என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக ஒரு இடத்தில் கூட காலூன்ற முடியாது. இங்குள்ள ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து அவர்களது சதியை முறியடிப்போம்” என்று எச்சரிக்கை விடுத்தார்.

 

 

சார்ந்த செய்திகள்