தனியார் ஆங்கில நாளிதழுக்கு ஆளுநர் ரவி நேர்காணல் கொடுத்துள்ளார். அதில் அவர் திமுக அரசு குறித்து பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் தெரிவித்திருப்பதாவது: “ஒரே நாடு ஒரே பாரதம் கொள்கைக்கு எதிராக இந்த திராவிட மாடல் கொள்கை இருக்கிறது. திராவிட மாடல் என்பது காலாவதியான கொள்கை. அதனை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஆளுநர் மாளிகை செலவுகள் குறித்து அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறிய தகவல்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை. தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய பல்கலைக்கழக சட்ட மசோதாக்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. முதல் முறை அவர்கள் அனுப்பிய சட்ட மசோதாவில் திருத்தங்களை செய்து தரச் சொல்லி அனுப்பினேன். ஆனால், மீண்டும் அதே சட்ட மசோதாவை நிறைவேற்றி அனுப்பியிருக்கிறார்கள். அதனால், அந்த சட்ட மசோதாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அந்த சட்ட மசோதாவில் பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சர் செயல்படுவார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பல்கலைக்கழக மானியக்குழு விதிகளுக்கு எதிராக உள்ளது. பல்கலைக்கழக மானியக்குழு விதிகளின் படி ஆளுநர் தான் பல்கலைக்கழகங்களுக்கு வேந்தராக இருக்க வேண்டும். அதனால் அந்த சட்ட மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், அண்ணா பல்கலை. சென்னை பல்கலை. உள்ளிட்ட எட்டு உயர் கல்வி நிறுவனங்களின் சட்ட மசோதாக்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. காரணம் அதில், துணைவேந்தர்களை நியமிப்பதை மாநில அரசு எடுத்துக்கொள்கிறது. ஆளுநர் துணைவேந்தர்களை நியமித்தால் தான் அதில் அரசியல் இருக்காது. அதனால், அவையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது தனிப்பட்ட முறையில் நல்ல மரியாதை வைத்திருக்கிறேன். அவரும் என் மீது மரியாதை வைத்திருக்கிறார். இருவரும் நல்ல நட்புறவுடன் இருக்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறார். இதில் மேலும் பல விஷயங்கள் குறித்து அவர் பேசியிருக்கிறார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் மார்க்சிஸ்ட் கட்சியின் எம்.பி. சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “திராவிட மாடல் செத்துப் போன தத்துவம்.” “மார்க்சியம் இந்தியாவை சிதைத்துவிட்டது.” “பரிணாமக்கோட்பாடு மேற்கத்திய அடிமைத்தனம்” என்று சொல்லும் ஆளுநர் அவர்களே, களைகளுக்கு கோடாலிகள் மீது கோபம் வருவது இயற்கை தான் என்பதை நாங்கள் அறிவோம். உங்கள் கோபத்தை ரசிக்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல் மற்றொரு ட்வீட்டில், “அமையப் போகும் கலைஞர் நூலகத்தில் தமிழ், ஆங்கில நூல்களே உண்டாம்” வருத்தப்படும் ஆளுநரே, உங்கள் உள்ளார்ந்த வேதனை புரிகிறது. இது தான் தமிழ்நாட்டின் பெருமை, முத்தமிழ் கண்ட மதுரைக்கு பெருமை. இந்தி திணிப்புக்கு எதிரான அரசியல் களமாகவும் இருப்பது “கலைஞர்” நூலகத்தின் கூடுதல் பெருமை” என்று பதிவிட்டுள்ளார்.