தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் மிகப்பெரிய மாவட்டமாக இருப்பது திருவண்ணாமலை மாவட்டம். இந்த மாவட்டத்தில் திருவண்ணாமலை, தண்டராம்பட்டு, செங்கம், கீழ்பென்னாத்தூர், கலசப்பாக்கம், ஜம்னாமத்தூர், போளுர், சேத்பட், ஆரணி, வந்தவாசி, செய்யார், வெம்பாக்கம் தாலுக்காக்கள் உள்ளன. இதில் வந்தவாசி தாலுக்கா என்பது இருப்பதிலேயே மிகப்பெரியது.
வந்தவாசி தாலுக்காவில் 8 குறுவட்டங்கள், 161 வருவாய் கிராமங்கள், 4.50 லட்சம் மக்கள் இந்த தாலுக்காவில் உள்ளனர். இந்த வந்தவாசி தாலுக்காவில் தான் பெரணமல்லூர் பேரூராட்சி, பெரணமல்லூர் ஒன்றியத்தின் பெரும்பாலான கிராமங்கள் உள்ளன. பெரணமல்லூர் பேரூராட்சி மன்றும் ஒன்றியத்தில் மட்டும் 1.5 லட்சம் மக்கள் தொகை உள்ளனர்.
இதனால் பெரணமல்லூரை தலைமையிடமாகக் கொண்டு தனி தாலுக்கா உருவாக்க வேண்டும் என்பது பெரணமல்லூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களின் அரசியல் பிரமுகர்கள், அமைப்புகளின் கோரிக்கையாக இருந்துவருகிறது. சின்ன சின்ன விவகாரத்துக்கும் நாங்கள் நீண்ட தொலைவில் உள்ள வந்தவாசிக்கு செல்ல வேண்டியதாக உள்ளது, மக்கள் தொகை அடிப்படையாக வைத்து பார்த்தாலும் இது தனி தாலுக்காவாக்கலாம், அதனால் அதனைச் செய்ய வேண்டுமென இதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலத்திற்கு வந்து மாவட்ட ஆட்சியரிடமும் மனு தந்துள்ளனர். இதேபோல் அரசாங்கத்துக்கும் பலமுறை இப்பகுதி மக்கள் கோரிக்கை மனுவை அனுப்பியுள்ளனர்.
இதுப்பற்றி இந்த மாவட்டத்தைச் சேர்ந்த அறநிலையத்துறை அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரன், ஆரணி பாராமன்ற தொகுதி எம்.பி காங்கிரஸ் விஷ்ணுபிரசாத், இந்த தொகுதியின் எம்.எல்.ஏ திமுகவை சேர்ந்த அம்பேத்குமார், வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் தூசி.மோகன் போன்றோர், பெரணமல்லூரை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுக்கா உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்து வருவாய்த்துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
இவ்வளவு கடிதங்கள் அனுப்பியும் அரசாங்கம் பெரணமல்லூரை தாலுக்காவாக்க அறிவிக்க தயக்கம் காட்டிவருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரும் வருத்தத்தில் உள்ளனர்.
இதுப்பற்றி திமுக இணையத்தள அணியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் நம்மிடம், பெரணமல்லூர் தொகுதியாக இருந்ததை தொகுதி வரையறையின்போது கலைத்து பெரணமல்லூர் தொகுதியின் பாதி பகுதிகள் வந்தவாசியோடும், பாதி பகுதிகள் போளுர் தொகுதியோடும் இணைத்துவிட்டார்கள். அப்போது எங்கள் பகுதி மக்கள் போராடியபோது, விரைவில் தாலுக்காவாக அறிவிக்கிறோம் என்றார்கள். 10 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் எங்கள் பகுதி மக்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாகிறார்கள் என்றார்.
நடைபெறும் சட்டமன்ற மானிய கோரிக்கையின்போது அறிவிப்பு வருமா என எதிர்பார்ப்பில் உள்ளார்கள்.