காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து சென்னை மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டதற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்தார்.
சென்னையில் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் மேலும் இது குறித்து, ’’காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது ஓட்டு வேட்டைக்கான விளையாட்டு. அரசியலுக்காக காவிரி நீர் தடுக்கப்படுகிறது. இது தனி மனித முடிவு அல்ல; பல உயிர்கள் சம்பந்தப்பட்டது. உயிர், பயிர், காலம் சம்பந்தப்பட்டது. இரு மாநிலம் சம்பந்தப்பட்டது. தாமதம் கூடாது.
10 மாநிலங்களில் வாரியம் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இங்கே வாரியம் அமைக்காமல் அரசியல் சுய லாபத்திற்காக மக்களின் வாழ்வோடு விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் மாணவர்கள் கொதித்தெழுந்து மெரினாவில் கூடியிருக்கிறார்கள். இன்னும் கூடுவார்கள். மேலும் மாணவர்கள் போராட்ட களத்திற்கு வருவார்கள். கைது நடவடிக்கையினால் அடக்க அடக்க மக்களின் கோபம் அதிகமாகும்’’ என்று தெரிவித்தார்.