ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்க்க 20 சட்டமன்ற உறுப்பினர்கள் தேவைப்படுவதால் ஆளுக்கு தலா 20 கோடி என 800 கோடி ரூபாய் வரை சட்டமன்ற உறுப்பினர்களிடம் பேரம் பேசப்படுவதாக ஆம் ஆத்மி கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பகிரங்கமாக குற்றம் சாட்டி இருந்தார். இந்நிலையில் நேற்று டெல்லி சட்டப்பேரவை கூட்டம் கூடியது. அப்போது ஊழல் வழக்கில் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா பதவி விலக வேண்டும் என பாஜக எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்தில் பதாதைகளை கொண்டு வந்தனர்.
பா.ஜ.கவினரின் இந்த ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து டெல்லி துணை ஆளுநர் வினய்குமார் சக்சேனா பதவி விலக வேண்டும் என ஆளும் ஆம் ஆத்மி கட்சியினர் சட்ட மன்றத்தின் வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் இரவு முழுதும் நடைபெற்றது.
அதே சமயம் சட்டப்பேரவையில் நேற்று முதல்வர் கெஜ்ரிவால் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை தாக்கல் செய்த நிலையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் டெல்லி துணைமுதல்வர் மணீஷ் சிசோடியாவின் வாங்கி லாக்கரில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே புதிய மதுக்கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி துணைமுதல்வர் மணீஷ் சிசோடியாவிற்கு சொந்தமான இடங்களில் இதற்குமுன் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.