இடைத்தேர்தலை சந்திக்க உள்ள 20 தொகுதிகளில் விளாத்திகுளமும் ஒன்று. (இப்போது நடக்காவிட்டாலும் நாடாளுமன்ற தேர்தலின்போது நடத்தப்படலாம்.) இதனால், சீட் பெறுவதற்கு தொகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்கள் காய் நகர்த்தி வருகின்றனர்.
அ.தி.மு.க.வின் கோட்டை என்று சொல்லப்படும் இந்த தொகுதியில், தி.மு.க.வும் சிலமுறை வெற்றி பெற்றிருக்கிறது. 2 லட்சம் வாக்காளர்களை கொண்ட இந்த தொகுதியில், ஓட்டு சதவீதத்தில் ரெட்டியார் சமூகத்தினர் முதல் இடத்தில் உள்ளனர். அதற்கு அடுத்த இடத்தில் தேவேந்திர குல சமூகத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர். இந்த 2 சமூகத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் சுமார் 5 ஆயிரம் தான் இருக்கும். இதற்கு அடுத்த இடத்தில் நாயக்கர் (கம்மவார், கம்பளம்) உள்ளனர். எனவே, இந்த தொகுதியில் எப்போதுமே ரெட்டியார் சமூகத்தை சேர்ந்தவர்களே களம் இறக்கப்படுவார்கள்.
2016-ஆம் ஆண்டு அ.தி.மு.க.வில் பலர் முட்டிய போதும் உமா மகேஷ்வரிக்கு சீட் கிடைத்தது. அவரும் வெற்றி பெற்றார். ஆனால், டி.டி.வி. அணிக்கு தாவியதால் பதவியை இழந்தார். அவர் தன்னை வளப்படுத்திக் கொண்டாலும், தொகுதி மக்களுக்கு என்று கடந்த 2 ஆண்டுகள் எதுவும் செய்யவில்லை. இதனால், அவர் மீது மக்களுக்கு அதிருப்தி நிறையவே இருக்கிறது. எனவே, அ.ம.மு.க சார்பில் அவருக்கு சீட் கிடைக்காது. கிடைத்தாலும் டெபாசிட் வாங்க முடியாது என்ற நிலைமை தான் இருக்கிறது. அந்த அளவுக்கு மக்களிடம் செல்வாக்கு(?) பெற்றிருக்கிறார். அதேபோல், அ.ம.மு.கவில் ஓரளவுக்கு பிரபலமான ஆள் ரூபம் வேலவன் தான். அந்த கட்சியின் ஒன்றிய செயலாளர். இவர் கடந்த 6 மாதங்களாக தொகுதி முழுக்க சுற்றுப்பயணம் செய்து, அமமுகவிற்கு உறுப்பினர்களை சேர்த்து வருகிறார். ஆனால், இவருக்கு சீட் கிடைப்பது கஷ்டம் தான். ஏனெனில் விளாத்திகுளத்தை பொறுத்தவரை ரெட்டியார், நாயக்கர் சமூகத்தை சேர்ந்தவர்கள் சரிவிகிதத்தில் இருந்தாலும், வெற்றியை தீர்மானிக்கிறது தேவேந்திர குல சமூக ஓட்டுக்கள் தான். தேவேந்திர குல சமூகத்தினருக்கும் நாயக்கருக்கும் பொதுவாக ஆகாது. அதனால், ரெட்டியாருக்கு ஓட்டைப் போட்டு ஜெயிக்க வைத்துவிடுவார்கள். கடந்த முறை அப்படித்தான் நடந்தது.
ரூபம் வேலவன்
உமா மகேஷ்வரி ரெட்டியார் சமூகத்தை சேர்ந்தவர், எதிர்த்து திமுகவில் போட்டியிட்ட பீமராஜ் கம்மவார் நாயுடு சமூகத்தை சேர்ந்தவர். அதற்கு முந்தைய தேர்தலில் (2011- மார்கண்டேயன், 2006- சின்னப்பன், 2001-பெருமாள்) வெற்றி பெற்ற எல்லோரும் ரெட்டியார் சமூகத்தை சேர்ந்தவர்கள். 1996 தேர்தலில் போட்டியிட்ட வைகோவை (நாயுடு)வெறும் 600 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ரவிசங்கர் ரெட்டியார் சமூகத்தை சேர்ந்தவர். (இந்த ரவிசங்கர் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கியது வேறு கதை). இப்போது அ.ம.மு.க. சார்பில் போட்டியிட காய் நகர்த்தும் ரூபம் வேலவனை பொறுத்தவரை அவர் தேவர் சமூகத்தை சேர்ந்தவர். மேலும், விட்டமின் “ப”அவரிடம் கிடையாது. அதனால், சீட் கிடைக்காது. கிடைத்தாலும் தோல்வி தான். வேறு யாரும் இல்லாதபட்சத்தில் குட்லக் செல்வராஜூவுக்கு சீட் கொடுக்கப்படலாம். இவர், கடந்த முறை அ.தி.மு.க. சார்பில் சீட் கேட்டு மனு செய்தவர். பெண்களுக்கு சீட் ஒதுக்கவேண்டும் என ஜெ.முடிவு செய்து, உமா மகேஷ்வரிக்கு சீட் கொடுத்துவிட்டார். எனவே, இந்த முறை அ.ம.மு.க சார்பில் அவருக்கு சீட் கொடுக்கப்படலாம்.
அ.தி.மு.க.வை பொறுத்தவரை முன்னாள் எம்.எல்.ஏ மார்க்கண்டேயனும், சின்னப்பனும் சீட் கேட்டு தலைமையிடம் முட்டி மோதி வருகின்றனர். ஆனால், தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் அமைச்சர் கடம்பூர் ராஜூவோ, மணல் திருடி விற்பனை செய்பவர்களுக்கு எல்லாம் சீட் கிடையாது என, மார்க்கண்டேயனை குறிவைத்து பேச, பதிலுக்கு தினகரன் அணியின் சிலீப்பர் செல் தான் கடம்பூர் ராஜூ என்று எதிர்பாய்ச்சல் பாய்ந்தார் மார்க்கண்டேயன். கடந்த முறை அம்மா நிறுத்திய உமா மகேஷ்வரியை, 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தேன். இந்த முறை கட்சித் தலைமை யாரை நிறுத்தினாலும், அவரை ஜெயிக்க வைப்போம். ஆனால், கடம்பூர் ராஜூவை தேர்தல் பொறுப்பாளராக போட்டதை ஏற்க முடியாது என்கிறார் மார்க்கண்டேயன். எனவே, அதிமுகவிற்கு உள்ளேயே உட்கட்சி பூசல் நீடிக்கிறது.
மார்க்கண்டேயன்
சமீபகாலமாக கடம்பூர் ராஜூவோடு சுற்றித் திரியும் சின்னப்பனும் எப்படியாவது சீட் பெற்றுவிட வேண்டும் என முனைப்பு காட்டி வருகிறார். இதற்கிடையே, செல்லப்பாண்டியனும் களம் இறங்கலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறார். ஏனெனில், கணிசமாக இந்த தொகுதியில் நாடார் சமூகத்தினர் இருக்கின்றனர். எனவே, சாதி ஓட்டு, கட்சி செல்வாக்கு இதன் மூலம் ஜெயிச்சிடலாம் என்ற மன ஓட்டம் அவரிடம் இருக்கிறது. எனெனில் 1989-ல் நடைபெற்ற தேர்தலில் ஜெ.அணியில் போட்டியிட்ட கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் 31 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ஜானகி அணியில் போட்டியிட்ட நாடார் சமூகத்தை சேர்ந்த தெய்வேந்திரன் 21 ஆயிரம் வாக்குகள் பெற்றார். இதை மனதில் வைத்து செல்லப்பாண்டியன் காய் நகர்த்துகிறார்.
தி.மு.க. தரப்பை பொறுத்தவரை பலர் சீட் ரேஸில் இருக்கின்றனர். நாகம்பட்டி பண்ணையார் குடும்பம் என்றழைக்கப்படும் ராமானுஜம் கணேஷ் சீட் கேட்டு முட்டி மோதி வருகிறார். இவர் கடந்தமுறை அ.தி.மு.க. சார்பில் கோவில்பட்டியில் அ.தி.மு.க சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பின்னர் அந்த தொகுதியில் வைகோ களம் இறங்குவதாக அறிவித்ததால், அவருக்கு நெருக்கடி கொடுக்க உள்ளூர் எம்.எல்.ஏவான கடம்பூர் ராஜூவுக்கே மீண்டும் வாய்ப்பு கொடுத்தார் ஜெயலலிதா. ஆனால், வைகோ போட்டியிடாமல் ஒதுங்கியது தனிக்கதை. அந்த ராமானுஜம் கணேஷ் இப்போது தி.மு.க. பக்கம் வந்துவிட்டார். திருவெறும்பூர் எம்.எல்.ஏ அன்பில் பொய்யாமொழி மூலம், திமுக தலைமையிடம் சீட் கேட்டிருக்கிறார். ரெட்டி சமூகத்தை சேர்ந்தவர் பிளஸ் பணபலம் எல்லாம் தமக்கு சீட் பெற்றுத் தரும் என்று நம்பியிருக்கிறார் அவர்.
அதேபோல், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். தமது மகனுக்கு சீட் வழங்க வேண்டும் என ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்திருக்கிறார். ம.தி.மு.க.வும், தி.மு.க.வும் இணைத்து பயணித்து வருவதால், வைகோ களம் இறங்க வேண்டும், தோற்ற தொகுதியில் மீண்டும் ஜெயித்து காட்ட வேண்டும் என அவரது அடிப்பொடிகள் உசுப்பிவிட்டு வருகின்றனர். இதேபோல், உட்லன்ட்ஸ் ரவி, வசந்தம் ஜெயக்குமார் போன்ற உள்ளூர் தலைகளும் தி.மு.க.வில் சீட் பெற்றுவிட வேண்டும் என கோதாவில் இறங்கி உள்ளனர்.
அ.தி.மு.க. சார்பில் மார்க்கண்டேயன் சீட் பெற்றுவிடுவார் என்று பேசப்படுகிறது. அந்த அளவுக்கு கிரவுன்ட் ஒர்க் செய்திருக்கிறார். அண்மையில் போட்டி போட்டு கூட்டம் நடத்தி, விளாத்திகுளத்தில் தினகரன் அணி என்று எதுவும் கிடையாது என்று அளவுக்கு நிலைமை மாறி விட்டது. ஏற்கனவே எம்.எல்.ஏவாகவும், அதற்கு முன்பு ஒன்றியக்குழு தலைவராக இருந்தபோதும் மார்க்கண்டேயன் பல திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறார். இப்போது, மக்களின் பல்ஸ் பார்த்து பணத்தை வாரி இறைப்பதால் அவர் ஜெயித்துவிடலாம்.
அதாவது, அவர் எம்.எல்.ஏவாக இருந்தபோது ஒன்றுமே செய்யலைன்னு புலம்பிய மக்கள், உமா மகேஷ்வரி வந்தபிறகு, இதற்கு மார்க்கண்டேயன் எவ்வளோ பரவாயில்லப்பா என்று பேசும் நிலைக்கு வந்து விட்டனர். ஜாதி சப்போர்ட், பண பலம், மக்கள் செல்வாக்கு இது எல்லாவற்றிலும் முன்னிலையில் இருக்கிறார் மார்க்கண்டேயன். ஆனால், தினகரன் அணி தான் பரிதாபமாக இருக்கிறது.