வேலூர் மாவட்டம், வேலூர் சட்டமன்றத் தொகுதியின் அமமுக வேட்பாளராக அப்புபால் என்கிற நிறுவனத்தின் உரிமையாளர் பாலாஜி என்பவர் அறிவிக்கப்பட்டிருந்தார். அவரும் கட்சி நிர்வாகிகளை சந்தித்தல், கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்தல், செயல்வீரர்கள் கூட்டம் நடத்துவது என தீவிரமாக இயங்கிவந்தார். இந்நிலையில், மார்ச் 17ஆம் தேதி மதியம் கட்சி நிர்வாகிகளோடு தேர்தல் வேலையில் ஈடுபட்டிருந்தபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்த தகவல் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனிடம் கூறப்பட்டதும், மாலையே வேறு வேட்பாளரை பரிந்துரையுங்கள் என கோபமாக சொன்னாராம். அதனைத் தொடர்ந்து முன்னாள் மேயர் வி.டி.தர்மலிங்கத்தை வேட்பாளராக அறிவித்துள்ளார் தினகரன்.
“தேர்தலில் நின்று தோற்பதற்கு எதற்கு நாம் செலவு செய்ய வேண்டுமென அமைதியாக இருந்தார் பாலாஜி. தலைமையும் தேர்தல் நிதி தரவில்லை. இந்த அதிருப்தியில், மனதாங்கலாக இருந்தவருக்கு நெஞ்சுவலி வந்துவிட்டது” என்கிறார்கள் அவருடன் இருப்பவர்கள். “செலவு செய்ய முடியாதவர் சீட் எதுக்கு வாங்கணும். கேட்டுக்கிட்டுத்தானே வேட்பாளரா அறிவிச்சேன். நெஞ்சு வலின்னு நாடகமாடறாரா எனக் கேட்ட தினகரன் உடனடியாக மாற்று வேட்பாளரை அறிவித்துவிட்டார்” என்கிறார்கள் அமமுகவின் மற்றொரு குழுவினர்.