Skip to main content

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; நா.த.க. வேட்பாளர் அறிவிப்பு!

Published on 14/06/2024 | Edited on 14/06/2024
Vikravandi by-election; N.t.K. Candidate announced

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில்  போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி (06.04.2024) உடல்நலக் குறைவால் காலமானார். இவரது மறைந்ததைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இத்தகைய சூழலில் தான் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று (14.06.2024) விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது.

இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பாக அன்னியூர் சிவாவை வேட்பாளராக அக்கட்சி தலைமை அறிவித்திருந்தது. இவர் திமுகவின் விவசாய அணி செயலாளராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஜூலை 10 அன்று நடைபெறவிருக்கும் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக அபிநயா (முதுகலை ஓமியோபதி மருத்துவம்) போட்டியிடவிருக்கிறார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வெற்றிக்கு முழு ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

கள்ளக்குறிச்சி சென்ற சாட்டை துரைமுருகன்; சூழ்ந்துகொண்ட திமுகவினர்; கைகலப்பால் பரபரப்பு

Published on 21/06/2024 | Edited on 21/06/2024
nn

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது. இதுவரையில் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 27 பேரும், சேலம் மருத்துவமனையில் 15 பேரும், விழுப்புரம் மருத்துவமனையில் 4 பேரும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேர் என மொத்தம் 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 4 பெண்களும் அடங்குவர். மேலும் 89 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் எனப் பலரும் கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்திற்கு இரங்கல்களையும், தடுக்க தவறியதாக ஆட்சி நிர்வாகத்திற்கு கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியும், 'சாட்டை' என்ற யூடியூப் சேனல் நடத்தி வருபவருமான சாட்டை துரைமுருகன் கள்ளக்குறிச்சி சென்றுள்ளார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் சொன்ன நிலையில், ஒரு இடத்தில் சூழ்ந்துகொண்ட அந்தப்பகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்கள் சிலர் சாட்டை துரைமுருகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் சிலர் சாட்டை துரைமுருகனை தாக்க முயன்றனர். கைகலப்பில் ஈடுபடும் அளவிற்கு சூழ்நிலை உருவானதால் அங்கிருந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் அவரை காரில் ஏற்றி அனுப்பிவைத்தனர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண சம்பவத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தொடர்பிருப்பதாக சாட்டை துரைமுருகன் வீடியோ வெளியிட்டிருந்த நிலையில் திமுக எம்.எல்.ஏ ஆதரவாளர்கள் கள்ளக்குறிச்சியில் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

Next Story

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; வேட்புமனு தாக்கல் நிறைவு!

Published on 21/06/2024 | Edited on 21/06/2024
Vikravandi by election Nomination completed

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி (06.04.2024) உடல்நலக் குறைவால் காலமானார். இவர் மறைந்ததைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இத்தகைய சூழலில்தான் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

அதன்படி கடந்த 14ஆம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியிட உள்ளனர். அதே சமயம் அதிமுக இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே போல், தேமுதிகவும் இந்த இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தது.

அதே போல், த.வெ.க தலைவரும், நடிகருமான விஜய் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்றும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் விக்கரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று (21.06.2024) மாலை 3 மணியுடன் நிறைவு பெற்றுள்ளது. அதன்படி விக்கரவாண்டி இடைத் தேர்தலில் மொத்தம் திமுக,  பாமக மற்றும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் உள்ளிட்ட 64 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.