தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறு இருக்கிறது. மேலும், அன்று பதிவாகும் வாக்குகள் மே 2ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டிவருகின்றனர்.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியிடுகிறார். இவர் இந்தத் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அத்தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த விஜயபாஸ்கரிடம் ஒரு சிறுமி, “எங்கள் பகுதியில் முறையான குடிநீர் வசதி இல்லை. சுடுகாட்டிற்கு செல்ல சாலை வசதி இல்லை” என கேட்கிறார். அதற்கு விஜயபாஸ்கர், “உழைக்கும் ஒருவரை தவறாக பேசக்கூடாது. இந்த ரோட்டை போட்டத்தற்கு பிறகு நன்றி சொல்வேன் என்றால் எப்படி, தார் ஊற்றிய பிறகு நன்றி சொல்வீர்களா? மூன்று நாட்களாக நான் பல ஊர்களுக்கு சென்றுவருகிறேன் யாரும் இதுபோல் கேட்கவில்லை. நீங்க, பெண் பிள்ளையை அதுவும் சிறு பிள்ளையை தப்பாக வளர்த்துள்ளீர்கள், தப்பாக தயார்படுத்தியுள்ளீர்கள். யார் நல்லவர், யார் கெட்டவர் என சொல்லி கொடுத்து வளர்க்க வேண்டும்” என்று பேசினார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் அதிகளவில் பரப்பட்டுவருகிறது.