இன்று காலை 11 மணியளவில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடங்கிய சிறிது நேரத்திலேயே கூச்சல், குழப்பம் ஏற்பட்டதால் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து மீண்டும் கூடிய நிலையில் மீண்டும் அமளி ஏற்பட்டதால் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் அமர்வு தொடங்கியதிலிருந்து ஆளுங்கட்சி எம்.பிக்களும் எதிர்க்கட்சி எம்.பிக்களும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய ஜனநாயகத்தை இழிவு செய்த ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி பாஜகவினர் முழக்கங்கள் எழுப்பியும், அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் முழக்கங்கள் எழுப்பியும் வந்த நிலையில், தற்போது எம்.பி பதவியில் இருந்து ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்தும் நாடாளுமன்றத்தில் எதிரொலித்து வருகிறது. இதனால் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் மாறி மாறி முழக்கங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று 11 வது நாளாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன.
இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.சி வேணுகோபால் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், "அதானி விவகாரம் பற்றி இந்த அரசு எதையும் கேட்க தயாராக இல்லை. இன்றும் அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். அதானி விவாகரத்தில் அரசுக்கு எந்த குற்றவுணர்வும் இல்லையெனில் நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்காமல் ஏன் ஓடுகிறது" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.