தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்தே கட்சியில் சீனியர்கள் ஓரங்கட்டப்படுவதாகவும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் அனைத்திலும் தன்னையே அண்ணாமலை முன்னிறுத்திக் கொள்வதாகவும் சமீபகாலமாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன.
இந்த நிலையில் தான் தமிழக பாஜக ஐ.டி பிரிவு தலைவர் நிர்மல் குமார், ஐ.டி. விங் செயலாளர் திலிப் கண்ணன், ஓ.பி.சி மாநிலச் செயலாளர் ஜோதி ஆகியோர் பாஜகவிலிருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். இதையடுத்து அண்ணாமலை, ஒவ்வொரு வினைக்கும் கண்டிப்பாக ஒரு எதிர்வினை இருக்கும் என எடப்பாடி பழனிசாமியை கடுமையாக எச்சரித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அண்ணாமலைக்கு எதிராக அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுகவினர் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று லதா, வைதேகி ஆகிய இரண்டு பாஜக நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பாஜகவின் ஐ.டி விங் நிர்வாகிகள் 10 பேர் கட்சியிலிருந்து விலகியுள்ளனர். மேலும், இவர்கள் அனைவரும் நிர்மல் குமார் தலைமையில் அதிமுகவில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், தங்களது விருப்பம் இல்லாமல் நிர்மல் குமார் அறிக்கை வெளியிடச் செய்ததாக பாஜக ஐ.டி பிரிவு நிர்வாகி ஆர்.கே. சரவணன் கூறியுள்ளார். மேலும் பாஜகவிற்கு மீண்டும் வருமாறு தாங்கள் வற்புறுத்தப்படுவதாக ஜோதி என்பவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து ஆர்.கே. சரவணன் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியதாவது, “நான் பாஜக சென்னை மேற்கு மாவட்ட ஐடி விங் துணைத் தலைவராக உள்ளேன். கட்சியிலிருந்து நான் விலகி விட்டதாக அன்பரசு ட்விட் ஒன்றை பதிவிட்டு இருந்தார். அது முற்றிலும் பொய்யான ஒரு தகவல். என் அனுமதி இல்லாமல் அந்த விஷயம் நடந்துள்ளது. அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நாங்கள் குடும்பமாக பாஜகவில் பயணித்து வருகிறோம். 2012 ஆம் ஆண்டிலிருந்து நான் பாஜகவில் இருக்கிறேன். என் காலம் முழுவதும் நான் மோடி மற்றும் அண்ணாமலை பின்னால் தான் பயணிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். என் உயிர் உள்ளவரை நான் பாஜகவில் தான் இருப்பேன்” எனக் கூறியுள்ளார். முன்னதாக சென்னை மாவட்ட பாஜக ஐடி விங் தலைவர் அன்பரசு வெளியிட்ட அறிக்கையில் மாவட்ட துணைத் தலைவர்கள் என்னும் இடத்தில் ஆர்.கே. சரவணன் கையெழுத்திட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.