டெல்லியில் நடைபெற்ற சி.ஐ.ஐ. ஆண்டு கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அதில், "கரோனா பாதிப்பு மக்களைக் கஷ்டப்படுத்தி வருகின்றது. அதிலிருந்து மக்களைக் காக்க வேண்டும். அதே நேரத்தில் பொருளாதாரத்தையும் நாம் வலுப்படுத்தியாக வேண்டும். கரோனாவால் இழந்த பொருளாதாரத்தை விரைவில் மீட்டெடுக்க வேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பமாக இருக்கின்றது. கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா நல்ல முறையில் சென்றுகொண்டிருக்கின்றது என்று கூறினார்.
இதனையடுத்து பா.ஜ.க இரண்டாவது முறையாக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு முடிவடைந்த நிலையில் மத்திய அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று அரசியல் வட்டாரங்களில் பேசி வருகின்றனர். இதனால் முக்கியமான அமைச்சரவையில் மோடி மாற்றம் ஏற்படலாம் என்று கூறுகின்றனர். குறிப்பாக நிதியமைச்சரவையில் மாற்றம் ஏற்படலாம் என்று பேச்சு அடிபட்டு வருகிறது. சமீபத்தில் பிரிக்ஸ் அமைப்பின் புதிய மேம்பாட்டு வங்கியின் தலைவராக இருந்த கே.வி.காமத் அந்தப் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். இதனால் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த நிதி அமைச்சர் பதவியில் இவர் இடம் பெறுவார் என்று டெல்லி வட்டாரங்களில் பேசி வருகின்றனர். ஆனால் இந்தத் தகவல் குறித்து பா.ஜ.க. தரப்பினர் அமைதி காத்து வருவதாகச் சொல்கின்றனர்.