Skip to main content

ஜெயலலிதா ஆட்சியில் மிகப்பெரிய மது ஒழிப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர் வைகோ

Published on 02/12/2022 | Edited on 03/12/2022

 

Vaiko was involved in the anti-liquor movement during the Jayalalithaa regime

 

கோவையை திமுக அரசு புறக்கணிப்பதாகக் குற்றம்சாட்டியும் பால் விலை மற்றும் மின் கட்டண உயர்வு ஆகியவற்றைக் கண்டித்தும் முன்னாள் அமைச்சர் வேலுமணி ஏற்பாட்டில் கோவை சிவானந்தா காலணியில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.

 

தமிழக எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டார். அதன்படி இன்று கோவை சிவானந்தா காலனி பகுதியில் நடைபெற்று வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார். மேடையில் பேசுகையில், ''கோவையில் மிகப் பிரமாண்டமான உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதிமுக அரசு கொண்டு வந்த திட்டங்களை திமுக அரசு கைவிட்டு வருகிறது. 

 

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை அடுத்தாவது திமுக அரசு தூக்கத்திலிருந்து எழுந்து மக்களுக்கு நன்மையாற்ற வேண்டும். பத்தாண்டு அதிமுக ஆட்சி ஒரு பொற்கால ஆட்சி. அந்த ஆட்சியில்தான் ஜெயலலிதா பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்து நாட்டு மக்களுக்குக் கொடுத்தார்கள். அவரின் மறைவுக்குப் பிறகு அவரது வழியில் என்னுடைய தலைமையில் சிறப்பான ஆட்சியை மக்களுக்குத் தந்தோம். அதிமுகவை குறைசொல்ல ஒரு தகுதி வேண்டும்'' என்றார்.

 

இந்நிலையில் அதிமுக கழக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் எஸ்.பி.வேலுமணிக்கு பழச்சாறு கொடுத்து ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தினை முடித்து வைத்தார். இதில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

 

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.பி. வேலுமணி “கோவை மாவட்டத்தில் ஒட்டு மொத்த மக்களும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டனர். இந்த உண்ணாவிரதத்தில் எங்கள் கோரிக்கையானது, பழுதடைந்த அத்தனை சாலைகளையும் சீரமைக்க வேண்டும். மழையில் மக்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டனர். மக்களின் கோரிக்கைகளை முதல்வர் புறக்கணிக்காமல் அத்தனை திட்டங்களையும் வேகமாகச் சரி செய்ய வேண்டும்.

 

11 சட்டமன்றத் தொகுதிகளிலும் சாலைகளை மேம்படுத்த வேண்டும். அதேபோல் மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு போன்றவற்றைத் திரும்பப் பெற வேண்டும். ஆர்ப்பாட்டத்தில் மக்கள் மிகப்பெரிய எழுச்சியுடன் பங்கு கொண்டனர். 

 

திமுக கூட்டணிக் கட்சிகள் அதிமுக ஆட்சியில் சிறு விஷயங்களுக்குக் கூட போராட்டம் நடத்துவார்கள். ஜெயலலிதா ஆட்சியில் வைகோ மிகப்பெரிய அளவில் மது ஒழிப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். ஆனால் இன்று அனைவரும் திமுகவின் சொற்படிதான் கேட்கின்றனர்” என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்