
தமிழக சட்டப்பேரவையில் 2025 - 2026ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி (14.03.2025) தாக்கல் செய்தார். இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின. இதனையடுத்து வேளாண் பட்ஜெட்டை, வேளான் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கடந்த மார்ச் மாதம் 15ஆம் தேதி (15.03.2025) தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து துறை ரீதியான மானியக் கோரிக்கை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (29.04.2025) பேசுகையில், “இந்த நேரத்தில் இதுவரை செயல்படுத்தி இருக்கக்கூடிய திட்டங்களால், செய்திருக்கக்கூடிய சாதனைகளால் ஏழாவது முறையும் தமிழ்நாட்டில் திமுக ஆட்சிதான் அமையும் என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்கிறது. என்னுடைய 60 ஆண்டுக் கால பொது வாழ்க்கையை ஒரே சொல்லில் குறிப்பிடுகிற மாதிரி கலைஞர், ‘ஸ்டாலின் என்றால் உழைப்பு... உழைப்பு... உழைப்பு...’ என்று சொன்னார். அவர் இன்றைக்கு இருந்திருந்தால் ஸ்டாலின் என்றால் சாதனை சாதனை சாதனையென்று நெஞ்சு நிமித்தி கம்பீரமா சொல்லி இருப்பார் என்பதை நான் ரொம்ப பணிவோடு சொல்லிக்கிறேன். ஏனென்றால் கலைஞர் இப்பொழுது இருந்தால் என்னவெல்லாம் செஞ்சிருப்பார்ன்னு யோசித்துத் தான் ஒவ்வொரு நாளும் நான் செயல்படுகிறேன்.
திட்டங்களைத் தீட்டுகிறேன். கலைஞரின் எண்ணங்கள்தான் இந்த அரசினுடைய செயல்கள். அந்த செயல்களால் விளைந்தது தான் இத்தனை சாதனைகள் என்பதைப் பெருமையோடு சொல்லிக்கிறேன். கடந்த ஆட்சியாளர்கள் செய்த நிர்வாக சீர்கேட்டால், நிர்வாகக் கட்டமைப்புகள் தரைமட்டத்திற்குப் போய் கட்டாந்தரையில் ஊர்ந்துகிட்டு இருந்துச்சு. ஊர்ந்து கொண்டிருந்த இந்த இழிவைப் போக்கி தலைநிமிர்ந்த தமிழ்நாட்டை உருவாக்கத் தமிழ்நாட்டு மக்கள் திமுகவை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தினார்கள். மக்களுடைய நம்பிக்கைக்கேற்ப தமிழ்நாடு இன்றைக்கு எல்லாத்துறைகளிலும் தலை நிமிர்ந்து உள்ளது. இதனை நெஞ்சை நிமிர்த்தி துணிச்சலோடு நான் பெருமையோடு சொல்கிறேன். இது சாதாரண சாதனை இல்லை. கடும் உழைப்பால் விளைந்த சாதனை. இதுவரை தமிழ்நாடு பார்க்காத சாதனை. இன்னும் சொல்லவேண்டுமானால் இந்தியாவில் எந்த மாநிலமும் செய்யாத சாதனை இது” எனப் பேசினார்.