Skip to main content

“யோகி அதித்யாநாத் ஆளும் மாநிலம்தானே குற்றத்தில் முதலிடம், மோடிக்கு தெரியாதா?” - வைகோ கேள்வி

Published on 02/04/2021 | Edited on 02/04/2021

 

vaiko condemned speech against modi in madurai at election campaign

 

மதுரையில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ புதூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர்  பேசியதாவது, “தமிழகத்தில் தானே புயல், வர்தா புயல், கஜா புயல் உள்ளிட்ட பல்வேறு புயல்கள் வந்து லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன, பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர். மத்திய அரசிடம் தமிழக அரசு ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 474 கோடி ரூபாய் நிவாரண நிதியாக  கேட்கப்பட்டது. ஆனால் மோடி அரசு 6 ஆயிரத்து 434 கோடி ரூபாய் மட்டுமே வழங்கியது. அதில் கேட்கப்பட்ட தொகையில் 4 சதவீதம் மட்டுமே கொடுக்கப்பட்டது. இந்த அரசு தமிழகத்தின் உரிமைகளை எல்லாம் காவுகொடுத்துவிட்டது. வேலையில்லா திண்டாட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள இளைஞர்கள், இளம்பெண்கள் முடிவெடுக்க வேண்டும். நீங்கள்தான் மாற்றத்தைக் கொண்டுவர முடியும். திமுக அரசு வந்தவுடன் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள  அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும். 

 

இந்த அரசால் எந்த திட்டங்களையும் கொண்டுவர முடியாது. துணை முதல்வர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தார் என கவர்னரிடம் ஸ்டாலின் ஊழல் புகார் கொடுத்தார். மற்ற அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கொடுக்கப்பட்டது. இதனால்தான் அவர்கள் மத்திய அரசின் காலடியில் புழுப்போல் கிடக்கிறார்கள். இவர்களால் தமிழ்நாட்டிற்கு எந்த திட்டத்தையும் பெறமுடியாது. இவர்கள் ஆதரித்து ஓட்டு போட்டதால்தான் வேளாண் சட்டம், குடியுரிமை சட்டம் ஆகியவை நிறைவேற்றபட்டன. இவர்களும் பாட்டாளி மக்கள் கட்சியும் எதிர்த்து ஓட்டு போட்டிருந்தால், அந்தச் சட்டம் செல்லாமல் போயிருந்திருக்கும். இப்படி தமிழகம் முழுவதும் ஊழலால் நாசமாகிக்கொண்டிருக்கிறது. 90 லட்சம் இளைஞர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள், 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். ஒரு லட்சம் சிறு, குறு  நடுத்தர தொழிற்சாலைகள் மூடப்பட்டன. அம்பானி, அதானி, அணில் அகர்வால் போன்ற கார்ப்பரேட் கம்பெனிகள்தான் ஆட்சி நடத்துகின்றனர். இவர்கள் புதிய  வேளாண் சட்டத்தை எதற்காக கொண்டு வந்தார்கள் என்றால், நல்ல விளைச்சல் காலத்தில் இவர்கள் விலை பொருட்களை வாங்குவார்கள். 

 

அதனை அவர்களது சேமிப்பு கிடங்கில் வைத்துக்கொண்டு, பேரிடர் காலங்களில் அதிக விலைக்கு விற்பார்கள். சிறு வியாபாரிகள் எல்லாம் வியாபாரம் செய்ய முடியாது. இனி  மார்க்கெட்டிங் கமிட்டி இருக்காது, ஃபுட் கார்பரேஷன் இருக்காது, ரேஷன் கார்டுகள் இருக்காது. அப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. அதனால்தான் இவர்களைத் தோற்கடிப்பதற்கு தமிழக மக்கள் தயாராகிவிட்டார்கள். திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்தவுடன் கரும்புக்கு 4,000 ரூபாயும், நெல் குவிண்டாலுக்கு 2,500 ரூபாயும், வேளாண் விளை பொருட்களைக் கொள்முதல் செய்ய மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும் என ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை 2,500 கோடி ரூபாய்  வழங்கப்படும். மூன்று புதிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்ய சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும். உழவர் சந்தை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும். திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தபடி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்போது அவர் சொன்னது உண்மை என்பது நிரூபிக்கப்படும். 

 

பிரதமர்  நரேந்திர மோடி அவர்கள் நேற்று தமிழ்நாட்டிற்கு வந்து ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறார். அவர்களுடைய தகுதிக்கு அது அழகல்ல ‘தமிழகத்தில் திராவிட  முன்னேற்றக் கழகத்தினர் பெண்களை இழிவுபடுத்துகின்றனர், பெண்களை மதிப்பதில்லை’ என்று பேசியிருக்கிறார். நீங்கள் இப்படி பேசலாமா? யோகி ஆதித்யநாத் ஆட்சி புரிவது உத்தரப்பிரதேசத்தில்தானே, அதுவும் இந்தியாவில்தானே உள்ளது. அங்கே நேஷனல் கிரைம் டிசர்ட் ரெக்கார்டு பிராஞ் எச்ஆர்பியின் சார்பில 2019இல் அளித்துள்ள அறிக்கையில், 59 ஆயிரத்து 853 குற்றங்கள் பதிவாகியுள்ளன. இது இந்தியாவிலேயே அதிகமான குற்றங்கள் நடைபெற்றது உத்தரப்பிரதேசத்தில் என்று அவர்கள் புள்ளிவிவரம் தந்திருக்கிறார்கள். இந்தியாவில் அதிகமான குற்றங்களாக 14 சதவீதம், பிஜேபி ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேசத்தில்தான் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2020 செப்டம்பர் 14ஆம் தேதி அத்ராஸ் என்ற இடத்தில் ஒரு தலித் பெண் கூட்டு பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார். இது எந்த மாநிலத்தில் என்று நான் பிரதமரைக் கேட்கிறேன்? இது உங்களுடைய நேரடிப் பார்வையில் இருக்கிற உத்தரபிரதேச மாநிலத்தில்தானே.

 

நீங்கள் தமிழ்நாட்டை பற்றி பேசுகிறீர்கள், பாரதியாரைப் பற்றி பேசுகிறீர்கள், திருவள்ளுவரைப் பற்றி பேசுகிறீர்கள். இதையெல்லாம் உங்களுக்கு சொல்லிக் கொடுத்தது இங்கு உள்ள பாரதிய ஜனதா கட்சியினர். இதையெல்லாம் சொன்னால் தமிழர்கள் ஏமாந்து போய்விடுவார்கள், அவர்களை எளிதில் ஏமாற்றிவிடலாம் என்று நீங்கள் பேசுகிறீர்கள். தூத்துக்குடி என்றொரு ஊர் இந்தியாவிலேயே இருப்பது உங்களுக்குத் தெரியுமா? அது தமிழ்நாட்டில் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? அங்கிருந்துதான் கப்பலோட்டிய தமிழன் சிதம்பரம் பிள்ளை ‘நேஷனல் ஸ்டீம் நேவிகேஷன்’ என்ற கம்பெனியை நடத்தினார் என்பது உங்களுக்குத் தெரியுமா? தூத்துக்குடியில் நடைபெற்ற வன்முறைச் சம்பவம் உங்களுக்குத் தெரியுமா? உங்கள் நண்பர் அணில் அகர்வாலின் ஸ்டெர்லைட் கம்பெனி உள்ளது. அந்த ஸ்டெர்லைட் கம்பெனியில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது உங்களுக்குத் தெரியாதா? உங்களுக்கு யாரும் தெரிவிக்கவில்லையா? மின்னல் வேகத்தில் செல்லக்கூடிய உளவுத்துறை உங்களிடம் உள்ளது. அங்கே 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அந்தக் கொடூரமான நிகழ்ச்சியில் அந்த 13 பேரும் எந்த தவறும் செய்யவில்லை. 

 

அவர்கள் ஊர்வலமாக வந்துகொண்டிருந்தார்கள். அவர்களை நோக்கி போலீசார் சுட்டார்கள். அந்த 13 பேரில் ஸ்னோலின் என்கிற 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தலையில் குண்டடிபட்டு தலை சிதறி இறந்தார். அந்த இடத்திலேயே துடிதுடித்து மாண்டார். இது தெரியாதா? பிரதமர் அவர்களே. தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை, திராவிட முன்னேற்றக் கழகம் மதிக்கவில்லை என்று சொல்கிறீர்களே. ஜான்சி என்கின்ற மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு பெண் வீட்டிற்கு சோறு கொண்டு போய்க்கொண்டிருந்தார். அவரை நோக்கி சுட்டார்கள். அவர் தலையில் துப்பாக்கி குண்டு பட்டு துடிதுடித்து இறந்தார். இது மிகக் கொடூரமான சம்பவம். இப்படி கொடூரமான சம்பவத்தில் இரண்டு பெண்கள் இறந்தார்கள். இந்தச் சம்பவம் உங்களுக்குத் தெரியாதா? தமிழ்நாட்டில் வந்து எது வேண்டுமானாலும் பேசலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள். இங்கு இருக்கக்கூடிய ஊழல் அரசு, ஊழல் காரணமாகத்தான் உங்கள் காலடியில் அவர்கள் புழு பூச்சியைப் போல கிடக்கிறார்கள். அதனால்தான் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் ஸ்டாலின் கவர்னரிடத்தில் ஊழல் பட்டியல் கொடுத்தார். அந்தப் புகாரில் திட்டவட்டமாக தெரிவித்தார், ‘முதலமைச்சர்  நெடுஞ்சாலைத்துறை காண்ட்ராக்டுகளை உறவினர்களிடத்தில் தந்திருக்கிறார். இதன் மூலம் 100 கோடி ரூபாய் காண்ட்ராக்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் 200 கோடி ரூபாய் முதலமைச்சர் சேர்த்திருக்கிறார். அதனால் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அவர் எழுதிக் கொடுத்தார். அவர் அதனைக் கண்டுக்கொள்ளவில்லை” என பேசினார்.

 

 

சார்ந்த செய்திகள்