தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் பரபரப்பாகியுள்ளன. விருப்ப மனு தாக்கல் செய்து தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த சில முன்னாள் அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் சில இடங்களில் வாய்ப்பு கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கடந்த 10ஆம் தேதி அதிமுக அதன் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதில் 171 வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. அதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் மூன்று தொகுதிகளின் வேட்பாளர்கள் பெயர்கள் வெளிவந்தன.
அதன்படி, ஆம்பூர் தொகுதியில் அக்கட்சியின் நகரமன்ற துணைத் தலைவராக இருந்த நஜர்முகம்மத்; வாணியம்பாடி தொகுதியில், அக்கட்சியின் ஆலங்காயம் ஒன்றியச் செயலாளராக உள்ள செந்தில்குமார்; ஜோலார்பேட்டை தொகுதியில், 2011 முதல் இந்த தொகுதியின் எம்.எல்.ஏவாக உள்ள வீரமணி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இதில் வாணியம்பாடி தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ.வும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும் இருந்த நிலோபர் கபிலுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அவரது ஆதரவாளர்கள் போராட்டமும் செய்தனர். திருப்பத்தூர் மாவட்ட அதிமுக துணைச் செயலாளராக உள்ள நிலோபர் கபிலுக்கு சீட் மறுக்கப்பட்டதன் முக்கியக் காரணம் அம்மாவட்டத்தின் அதிமுக செயலாளராக உள்ள கே.சி. வீரமணியுடனான மோதல் போக்கே என பேசப்பட்டு வருகிறது.
வாய்ப்பு வழங்கப்படாத நிலோபர் கபில் நேற்று (12.03.2021) சென்னையிலிருந்து வாணியம்பாடி திரும்பினார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “சத்தியமாகச் சொல்கிறேன். எனக்கு வீரமணி எந்த சமாதானமும் செய்ததில்லை. ஜெயலலிதா மறைந்துவிட்டார் என்று பொய் பேசக்கூடாது. அதிமுக எம்.எல்.ஏ.க்களாக இருந்த ஜெயந்தி, பார்த்திபன் மற்றும் பாலசுப்பிரமணி ஆகியோர் வீரமணி தொல்லையால்தான் வெளியேறி சென்றுவிட்டனர். எனக்கும் நிறைய தொந்தரவை அவர் தந்துள்ளார். இதுவரைக்கும் என் கட்சிக்காக, நான் ஒரு அமைச்சராக இருப்பதால் ஜெயலலிதாவுடைய மரியாதைக்காகவும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மரியாதைக்காகவும் நான் யாரிடமும் புகார் செய்ததே இல்லை.
மக்கள் மத்தியில் என்னை அவமானப்படுத்தியதால்தான் நான் இன்றைக்கு பேசிக்கொண்டிருக்கிறேன். எம்.பி. தேர்தலில் 24 ஆயிரம் வாக்குகள் வாணியம்பாடியில் கிடைக்கவில்லை என்று அமைச்சர் தரப்பில் குற்றச்சாட்டு கூறுகிறார்கள். பி.ஜே.பியுடன் கூட்டணி வைத்தால், முஸ்லிம் சமுதாயத்தில் கொஞ்சம் ஓரங்கட்டத்தான் செய்வார்கள். பி.ஜே.பி. கூட்டணியிலிருந்தும் கூட அமைச்சராக நீடித்த பிறகு என்னுடைய சமுதாயத்தினர் என்னை என்னென்ன பேசினார்கள் என்பது எனக்குத்தான் தெரியும்” என்று கண்ணீர் விட்டு அழுதார்.