ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெறும் என கடந்த மாதம் 18 ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. இடைத்தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் முதன்மைக் கட்சிகள் தங்கள் வேட்பாளரை அறிவித்து சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், சுயேட்சை வேட்பாளர்களும் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்காக கூட்டணிக் கட்சிகளான திமுக, விசிக போன்றவை களத்தில் இறங்கி தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகின்றன. அதேபோல், அதிமுக வேட்பாளர் தென்னரசுவிற்கு ஆதரவாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கூட்டணிக் கட்சிகளான தமாகா, பாஜகவும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இபிஎஸ் தரப்பு வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்பே ஓபிஎஸ் தரப்பு வேட்பாளரை அறிவித்து வேட்புமனுவையும் தாக்கல் செய்தது. ஆனால், தேர்தலில் அதிமுக வெற்றி பெற தனது வேட்பாளரை வாபஸ் பெறுவதாக ஓபிஎஸ் தரப்பினர் அறிவித்தனர். தொடர்ந்து, வெற்றி பெற இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாகவும் ஓபிஎஸ் தரப்பு அறிவித்தது. ஆனால், தேர்தல் ஆணையம் ஓபிஎஸ் தரப்பினரின் பேச்சாளர் பட்டியலை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் சின்னத்திற்கு ஆதரவாக ஓபிஎஸ் பிரச்சாரம் மேற்கொள்ள முடியாத நிலை வந்தது.
இந்நிலையில், அதிமுக ஓபிஎஸ் தரப்பு தனது வேட்பாளரை வாபஸ் பெற்றது ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் அணி நிர்வாகிகள் விலகி எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்தனர். ஓ.பி.எஸ் அணியின் ஈரோடு மாவட்ட செயலாளராக இருந்த முருகானந்தம், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் தங்கராஜ், ஈரோடு மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் முருகன், வர்த்தக அணி செயலாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் பழனிசாமி அணியில் இணைந்தனர். மேலும், ஈரோட்டில் உள்ள ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அனைவரும் விரைவில் பழனிசாமி அணிக்கு வருவார்கள் என அணிமாறியவர்கள் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த முருகானந்தம், “மாவட்ட செயலாளராக நான் உள்ளேன். ஆனால், எனக்கு தெரியாத வேட்பாளரை நிறுத்தினார். அந்த கசப்பின் காரணமாக வேட்பாளர் தேர்வு குறித்து தலைமையிடம் கேட்டேன். எந்த பதிலும் வரவில்லை. தொடர்ந்து இரட்டை இலை எங்கு உள்ளதோ அங்கு இணைத்துக் கொள்ளலாம் என இபிஎஸ் தலைமையில் இணைய வந்துள்ளோம். 2 மாதங்கள் தான் மாவட்ட செயலாளராக இருந்தேன். சிரமப்பட்டு 106 பொறுப்பாளர்களை ஈரோட்டில் நியமித்துள்ளேன். அனைவரையும் அழைத்து வந்து இபிஎஸ் தலைமையில் இணைக்க இருக்கிறேன்” எனக் கூறினார்.