மத்திய அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக இன்று மாலை தமிழகம் வருகிறார்.
பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, 'என் மண்; என் மக்கள்’ என்ற பெயரில் இன்று இராமேஸ்வரத்தில் இருந்து ஊழலுக்கு எதிரான நடைபயணத்தைத் துவங்க இருக்கிறார். இந்த நடைப்பயணத்தை இன்று மாலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்க உள்ளார். இந்த விழாவில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ள உள்ளனர்.
இந்நிலையில், மத்திய அமைச்சர் அமித்ஷா டெல்லியில் இருந்து இன்று மாலை 4 மணிக்கு விமானம் மூலம் மதுரைக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் செல்கிறார். பின்னர் மாலை 5.45 மணி முதல் 7.15 மண் வரை பாத யாத்திரைக்கான தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். பின்னர் நாளை நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அதனைத் தொடர்ந்து நாளை பிற்பகல் 2 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லிக்குப் புறப்பட்டு செல்கிறார்.
முன்னதாக அண்ணாமலை நடத்தும் 'என் மண்; என் மக்கள்' என்ற ஊழலுக்கு எதிரான பேரணியின் தொடக்க விழாவில் பங்கேற்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அண்ணாமலை ஏற்கனவே அழைப்பு விடுத்து இருந்தார். அண்ணாமலையின் இந்த அழைப்பை எடப்பாடி பழனிசாமி புறக்கணித்துள்ளார். இருப்பினும் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.