காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 10 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு மாணவர்கள் மத்தியில் உரையாடினார். அப்போது எம்.பி. பதவியிலிருந்து நான் தகுதி நீக்கம் செய்யப்படுவேன் எனக் கற்பனையில் கூட நினைத்ததில்லை என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
ராகுல் காந்தி மீது குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து அவர் எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனையடுத்து தான் 'தகுதி நீக்கம் செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்' என அவருடைய ட்விட்டர் பக்கத்தின் சுயவிவரத்தை ராகுல் காந்தி மாற்றி இருந்தார். மேலும் மக்களவைச் செயலாளர் கடிதம் அனுப்பியதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள அரசு பங்களாவையும் காலி செய்தார்.
இந்நிலையில் 10 நாட்கள் அமெரிக்காவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, ஸ்டாண்போர்டு பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், “2004 ஆம் ஆண்டு அரசியலுக்குள் நுழைந்த போது நான் கற்பனை செய்திருந்த இந்திய அரசியலுக்கும் 20 ஆண்டுகளில் நான் அனுபவித்து உணர்ந்த அரசியலுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. தற்போது நாட்டில் உள்ள அரசியல் நான் கற்பனை செய்திடாத ஒன்று. அவதூறு வழக்கிற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்ட முதல் நபர் நான்தான்; எம்.பி. பதவியிலிருந்து நான் தகுதி நீக்கம் செய்யப்படுவேன் எனக் கற்பனையில் கூட நினைத்ததில்லை; நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறியது கற்றலுக்கான வாய்ப்பை வழங்கியது. எம்.பி தகுதி நீக்கத்தை சிறப்பான வாய்ப்பாக பார்க்கிறேன்.
உண்மையில் எம்.பியாக இருந்ததை விட தற்போது மக்களுக்கு சேவை செய்ய மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தியாவில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஜனநாயகத்திற்காக போராடி வருகிறோம். அத்தகைய சூழலில் தான் இந்திய ஒற்றுமைப் பயணத்தை மேற்கொள்ள முடிவு செய்தேன். நாட்டின் நிலைமை குறித்து வெளிநாட்டில் பயிலும் இந்திய மாணவர்களிடம் பேச விரும்புகிறேன். அது என் உரிமை. மாணவர்களிடம் நிலைமையை எடுத்து கூறுகிறேன். ஆதரவு கோரவில்லை. பிரதமர் மோடி ஏன் இத்தகைய உரையாடலை மாணவர்கள் மத்தியில் நிகழ்த்துவதில்லை” எனக் கூறினார்.