கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளரும், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கைக்குரிய நண்பருமான குமரகுரு, தற்போது நான்காவது முறையாக தேர்தலை சந்திக்கிறார். குமரகுரு ரேஷன் கடை விற்பனையாளராக இருந்தவர்; மாவட்டச் செயலாளராக, உளுந்தூர்பேட்டை ஒன்றியச் செயலாளராக பதவி வகித்தவர். ஜெயச்சந்திரன் விசுவாசியாக வலம் வந்த குமரகுரு, அவர் மூலம் பதவியைப் பெற்று இன்றைக்கு முதல்வரின் திக்கஸ்ட் நண்பர்களில் ஒருவராக வலம் வருகிறார்.
இவர் 2006ஆம் ஆண்டு திருநாவலூர் தொகுதியில் முதல்முறையாக எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற்றார். பிறகு தொகுதி மறுசீரமைப்பின் மூலம் திருநாவலூர் தொகுதி உளுந்தூர்பேட்டையோடு இணைக்கப்பட்டது. 2011இல் உளுந்தூர்பேட்டை தொகுதியில் இரண்டாவது முறையாக நின்று வெற்றிபெற்ற குமரகுரு, 2016இல் மூன்றாவது முறையாகவும் வெற்றிபெற்று எம்.எல்.ஏ.வாக உள்ளார். தற்போது நான்காவது முறையாக களத்தில் இறங்கியுள்ளார். கடந்த முறை இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் வசந்தவேலைவிட 4,562 வாக்குகள் மட்டுமே அதிகமாக பெற்று வெற்றிபெற்றார்.
திமுக சார்பில் திருநாவலூர் தொகுதியில் 1996 - 2001 வரை எம்.எல்.ஏ.வாக இருந்தவர் மணிகண்ணன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது திமுக தரப்பில் இவர் களமிறக்கப்பட்டுள்ளார். இவர், எம்.எல்.ஏ.வாக இருந்தபோது கெடிலம் ஆற்றில் ஆதனூர் அருகே பெரிய பாலம் கட்டி கிராமங்களை இணைப்பதற்கு வழிவகுத்துள்ளார். இதேபோன்று பல்வேறு மக்களுக்கான பணிகளை நிறைவேற்றியுள்ளார். மேலும் கட்சி கடந்து இவருக்கு மக்களிடம் செல்வாக்கு உள்ளது. இவர் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர். குமரகுரு, உடையார் சமூகத்தைச் சேர்ந்தவர். இந்த தொகுதியில் பெருமளவில் வன்னியர் சமூகமும், அடுத்து தலித், உடையார்கள், இஸ்லாமியர்கள் மற்றும் அடுத்தடுத்து சிறு சிறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வாக்காளர்களாக உள்ளனர்.
குமரகுரு, ‘சாலை அமைத்தேன், சாக்கடை கட்டினேன்’ என்று மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகிறார். இவர் தொகுதியில் செய்த பெரும் பணி, திருப்பதி தேவஸ்தானத்தின் மூலம் உளுந்தூர்பேட்டையில் வெங்கடேச பெருமாள் கோயில் ஒன்றை உருவாக்குவதற்கு கடும் முயற்சி செய்து தற்போது அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. மற்றபடி, மிகப்பெரிய சாதனையாக சொல்லிக்கொள்ளும்படி தொகுதியில் எதுவும் செய்யவில்லை என்பது மக்கள் கருத்து. மேலும், பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள். இவரும் அந்த ஆயுதத்தை பாதாளத்தையும் தாண்டி பாய்ச்சும் அளவிற்குத் தயாராக உள்ளார் என்கின்றனர் அத்தொகுதி மக்கள்.
திமுக வேட்பாளர் மணிகண்ணன், கட்சியினர், அதைக் கடந்துள்ள பலதரப்பட்ட மக்களிடம் தனக்குள்ள நெருக்கம், செல்வாக்கு ஆகியவை கை கொடுக்கும் என்று பெரிதும் நம்பியுள்ளார். ஓரளவிற்கு செலவு செய்வார். குமரகுரு அளவிற்கு இவரால் பணம் செலவு செய்ய முடியுமா? என்பது ஒரு கேள்விக்குறி என்கின்றனர் அப்பகுதி மக்கள். மேலும் கடந்த சில மாதங்களாக பல்வேறு வாக்காளர்களைக் கவரும் வகையில் வளையம் அமைத்து பல்வேறு உதவிகளை செய்துள்ளார் குமரகுரு. அந்த வளையத்தை உடைத்து மணிகண்ணன் வெற்றிபெறுவாரா என்று ஆவலோடு எதிர்நோக்கி உள்ளார்கள் உளுந்தூர்பேட்டை தொகுதி மக்கள்.
இவர்களோடு அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வாக இருந்த ஞானமூர்த்தியின் சகோதரர் ராஜாமணி, தினகரன் கட்சியில் அமமுக மாவட்டச் செயலாளராக உள்ளார். இவரையே தற்போது தினகரன் வேட்பாளராக களமிறக்கியுள்ளார். இவர் மேற்படி பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் இருவருக்கும் எந்த அளவிற்கு நெருக்கடியைக் கொடுப்பார் என்பது தேர்தலின்போது தெரிந்துவிடும். இவர்களோடு (சிபிஐஎம்எல்) வெங்கடேசன், மக்கள் நீதி மய்யம் சின்னையன், நாம் தமிழர் கட்சி சார்பில் புஷ்பகிரி ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.