தமிழ்நாடு முழுவதும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். மேலும், அவர் பயணிக்கின்ற மாவட்டங்கள் தோறும் திமுகவின் மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்கி அவர்களின் கட்சிக்கு உழைத்த உழைப்பினை அங்கீகரித்தும் வருகிறார். அந்த வகையில், கலைஞரின் நூற்றாண்டை முன்னிட்டு தேனி தெற்கு மற்றும் வடக்கு மாவட்டங்களை சேர்ந்த திமுகவின் 1000 மூத்த முன்னோடிகளைத் தேர்வு செய்து தலா ரூ.10,000 ரூபாய் வழங்கினார். இதற்கான நிகழ்வு தேனி மாவட்டத்தின் கம்பத்தில் நேற்று (25-10-23) நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, தேனி மாவட்ட இளைஞரணி செயலாளர்கள் கூட்டம் தேனி அருகே உள்ள வீரபாண்டியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், திமுக இளைஞரணி செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “பிரதமர் மோடி பிரச்சாரத்திற்காக எங்கு சென்றாலும், திமுகவை பற்றியும் என்னை பற்றியும் தான் பேசி வருகிறார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கலைஞரின் குடும்பம் தான் வாழ்கிறது என்று சொல்கிறார். பா.ஜ.க ஆட்சிக்கு 9 ஆண்டுகள் ஆகிவிட்டது. அவரது ஆட்சியில் அதானி என்ற ஒரு குடும்பம் மட்டும் தான் வாழ்கிறது. இந்த 9 ஆண்டுகளில் ஒரு தனியார் நிறுவனம் இந்த அளவுக்கு அசுர வளர்ச்சி பெற்றது குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் ஆய்வு செய்து வெளியிட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி, பிரதமர் மோடியும் அதானியும் சேர்ந்து விமானத்தில் பயணிப்பது குறித்து ஒரு புகைப்படத்தை காட்டி கேள்வி எழுப்பினார். ஆனால், இதுவரை அவரிடம் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை.
இதற்கெல்லாம் பதில் சொல்லாமல், நான் பேசாததை பேசியது போல் சொல்லி திசை திருப்பி அதை இந்தியா முழுக்க பேச வைத்துவிட்டார்கள். அது தொடர்பான வழக்கும் இப்போது நீதிமன்றத்தில் இருக்கிறது. ஆனால், அதற்கெல்லாம் மன்னிப்பு கேட்க மாட்டேன். தமிழக ஆளுநர், தமிழகத்தில் ஆரியமும் கிடையாது, திராவிடமும் கிடையாது என்று பேசியிருக்கிறார். அது பற்றி எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது, இதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது, நிறைய படித்திருக்கனும் என்று கூறுகிறார். அண்ணா மற்றும் திராவிடர் பெயரின் உள்ள கட்சியில் தலைவராக இருந்து கொண்டு பதில் சொல்லாமல் தப்பித்து இருக்கிறார். ஆளுநர் என்றாலே எடப்பாடி பழனிசாமிக்கு பயம்” என்று பேசினார்.