காஷ்மீரிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவரான உ.தனியரசு எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மத்திய பாஜக அரசு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்து 370 மற்றும் 35A சட்டங்களை ரத்து செய்திருப்பது - இந்தியாவுடன் காஷ்மீர் இணையும் போது ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை மீறிய செயலாகும்.
மத்திய அரசு ரத்து செய்த பழைய சிறப்பு சட்டங்களையே அங்கு மீண்டும் அமல்படுத்தி, அம்மக்களுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டும்.
காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்தில்லை. அதற்கு மத்திய அரசின் புதிய நடவடிக்கைகள் ஊறு விளைவிக்கும் என்பதை சுட்டிக் காட்டுகிறோம்.
மத்திய அரசு காஷ்மீர் ஒப்பத்தத்தை மீறி 370 மற்றும் -35 A வை ரத்து செய்திருப்பது நேர்மையற்ற செய்லாகவும் - மேலாதிக்க போக்காகவும் உள்ளது.
காஷ்மீர் மக்களின் உணவுர்களுக்கு மதிப்பளிக்காமல், அவர்களின் கருத்துகளை அறியாமல் எடுத்த இம்முடிவை தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை கண்டிக்கிறது.
காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்திருப்பதும் கண்டிக்கத்தக்கது. மீண்டும் ஜம்மு காஷ்மீர் - லடாக் பகுதிகளை உள்ளடக்கிய தனி அதிகாரமிக்க முழு மாநில அந்தஸ்த்தை வழங்கிட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
ஜம்மு காஷ்மீரில் நிலவும் தற்போதைய நிலைய அறிந்து கொள்ள, அனைத்து கட்சி தலைவர்கள் குழு அங்கு சென்று பார்வையிடவும் உண்மை நிலையறியவும் மத்திய அரசு உடனடியாக அனுமதி வழங்கிடவும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.